A tribute to all the wonderful anaesthesiologists out there!
I won the second prize for the above poetry in the Tamil literary contest conducted at the state level for anaesthesiologists as a part of ISA Tamil Nadu golden jubilee celebration – South zone ISACON.
பிப்ரவரி 24 , 2022 உக்ரைன் தலைநகர் கீவ், விடியற்காலை நாலு மணி இருபத்தைந்து நிமிடங்கள், மைத்ரேயியின் ஆழ்ந்த தூக்கம் நொடியில் கலைந்து , கட்டிலில் இருந்து கீழே தள்ளப்பட்டாள். அவள் அறையில் தன் வாழ்நாளில் இதுவரை காணாத அதிர்வையும், கேளாத உரத்த சத்தத்தையும் கேட்டு மிரண்டு போனாள் மைத்ரேயி. “இட்ஸ் என் எர்த் குவேக்!!!”என்று அவள் கட்டிலிற்கு அடியில் புகுந்து கொள்ள முயன்ற போது அறைக் கதவை உதைத்து உள்ளே பாய்ந்தாள் ஜெசி! “ ரஷ்யா டிக்ளர்ட் ஸ்பெஸல் மிலிட்ரி ஆபரேஷன் ஆன் உக்ரைன்!” என்று கதறியபடி “ நம்மள ஊர விட்டு இவாக்குவேட் பண்ண வேன் வந்துருக்கு, சீக்கிரம் கிளம்புடி” என்று தன் அறையை நோக்கி ஒடினாள் ஜெசி.
பத்து நிமிடங்களில் மைத்ரேயி தன் மருத்துவப் படிப்பு சம்மந்தமான புத்தகங்களையும், முக்கிய ஆவணங்களையும்,ஆடைகளையும் எடுத்து டிராவலர் பேக்கில் தினித்த போது, அருகாமையில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கும் சப்தம். அடுத்த அதிர்வில் அவள் அறையின் ஜன்னல் கதவுகள் படபடக்கும் இறக்கைகள் போல் அடித்து, கண்ணாடி மின்னலென விரிசலானது. பதறிய மைத்ரேயி காதை பொத்தி கொண்டு பேக்குடன் வெளியேற ஓடினாள். ஏதோ சில எண்ணங்கள் அவளை நிறுத்தியது. அறையின் கப்போர்டுகள் அனைத்தையும் திறந்தாள். கடைசி கப்போர்டை திறந்தவுடன் அவளது இரு கண்களும் தங்களுக்குள் மகிழ்ந்து ஹைஃபைவ் செய்து கொண்டன. தனது லாவண்டர் லெஹெங்காவை எடுத்து கையில் சுத்தி, மார்போடு இறுக்கி அணைத்துக் கொண்டு ஹாஸ்டலை விட்டு ஜெசியுடன் வேனில் ஏறினாள் மைத்ரேயி.
புகைமூட்டமும் பதட்டமும் நிறைந்த இடத்திலிருந்து வெகு தூரம் கடந்து வந்ததை சற்று கண் அயர்ந்து திடுக்கிட்டு விழித்ததும் உணர்ந்தாள் மைத்ரேயி. “இப்ப நம்ம என்ன பண்ண போறோம்? இந்தியா திரும்ப முடியுமா? இப்பொழுது தங்கும் இடம் பாதுகாப்பானதா?” என்று பல கேள்விகளை ஜெசியிடம் கேட்டுக்கொண்டிருந்தாள். “நீ தான் ஞானி மாதிரி பேசுவியே?..வா பாத்துக்கலாம் “என்று மைத்ரேயியின் தோள் மேல் கை போட்டுக்கொண்டு அறைக்குள் இழுத்துச் சென்றாள் ஜெசி.
பிப்ரவரி மாதக் கடைசியில் கீவிலிருந்து மரியாபொல் என்ற நகரில் உள்ள ஒரு பெரிய அரங்கத்திற்கு இவர்களை கொண்டுச் சென்றனர். அங்கு மிஷா என்ற நடுத்தர வயது பெண்ணைச் சந்தித்தாள் மைத்ரேயி. மிஷாவின் மேனி குருதியால் குளிப்பாட்டிய உடல் போல் காட்சியளித்தது. அவள் கண்கள் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்வது போலிருந்தது. அவளது கூந்தலில் இரத்த கட்டிகள் பொடி பொடியாகப் படர்ந்திருந்தன. உதடுகள் வெடித்தும் தண்ணீரை வெறுத்திருந்தன. மிஷாவின் அருகில் உட்கார்ந்திருந்த சிறுமியிடம் ” உன் பெயர் என்ன?” என்று கேட்டதும் “நெடியா” என்று புன்னகைத்தாள். அங்கு தங்கியிருந்த நாட்களில் மிஷாவிற்கு துணையாக இருந்தாள் மைத்ரேயி. தான் கற்றறிந்த ரஷ்ய மொழியில் மிஷாவின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட நாட்களை பற்றி அறிந்து கொண்டாள் மைத்ரேயி.
பிப்ரவரி 26, இரவு 11 மணியளவில் மிஷா, மிஷாவின் கணவர் விக்டர், அவளது பிள்ளைகள் இர்வின், நெடியா, மேக்ஸிம் ஆகியோர் வீட்டின் ஜன்னல் வழியே தொலைதூரத்தில் அணு ஆயுத தாக்குதலால் புகை கொப்பளித்து வருவதை பார்த்து கொண்டிருந்தனர். மிஷா தனது தங்கை “மிலா” வைத் தேடினாள். மிலா நிறை மாத கர்ப்பிணி, கணவன் ராணுவ வீரன். தன் கண்ணீரை சிறிதளவும் கண்டு கொள்ளாது குறுநகையோடு இருந்த நிலவை சிட்அவுட்டிலிருந்து பார்த்து கொண்டிருந்தாள் மிலா.
மிலாவின் தலையில் மெதுவாக கை வைத்தாள் மிஷா. மிலாவை எப்படியாவது நாளை ஹாஸ்பிடலில் சேர்த்து விட வேண்டும் என்று நினைத்து பெருமூச்சு விட்டாள். சற்று நேரத்தில் அனைவரும் உறங்கி போனார்கள். அதிகாலை 3:17, பலத்த இறைச்சல் கேட்டு நடுங்கி எழுந்தாள் மிஷா. விமானப் படைத் தாக்குதல் என்பதை அறிந்து அறையை விட்டு வெளியேற, எரிபந்து போல் ஏதோ ஒன்று வீட்டின் முன் புல்வெளியில் விழுந்து, கதவு தீப்பிடித்தது. “தே ஆர் ஷெல்லிங், வீ நீட் டு மூவ் டு தி பேஸ்மெண்ட்” என்று விக்டர் பிள்ளைகளையும், மிஷா, மிலாவையும் அழைத்து பேஸ்மெண்ட்டிற்கு ஓடினான்.
சிறுமி நெடியா துயில் கலைந்து அழ ஆரம்பித்தாள். தண்ணீர் வேண்டி கத்தினாள். விக்டர் தண்ணீர் எடுத்து வர வீட்டிற்கு செல்ல யோசித்தான். மிஷா விக்டரை அனுமதிக்க மறுத்தாள். தாக்குதல் பலமாகின. பதினாறு மணி நேரம் கடந்தது. நெடியா பேசவும் தெம்பின்றி வாடிய மலரானாள் . விக்டர் தன் மகளை பார்த்து பொறுமை இழந்து துடித்தான். “என்ன நேர்ந்தாலும் இந்த அறையை விட்டு வெளியே வராதீர்கள்” என்று விக்டர் மிஷாவிடம் கூறி பின் கதவு வழியாக ஓடி, தண்ணீர் கேன்களை அள்ளி எடுத்து விரைந்தான். அப்போது காலடி சத்தம் கேட்டது. ” எதுவும் செய்ய முயற்சிக்காதே” என்றான் ஒரு ரஷ்ய சிப்பாய். விக்டர் சொல்ல வருவதை அவன் கவனிக்க மறுத்தான். விக்டர் பாய்ந்து தண்ணீர் கேன்களை பேஸ்மெண்ட்டிற்கு செல்லும் படியில் தூக்கி எறிந்து எதிர் புறமாக ஓட ஆரம்பித்தான். தன் காலில் துப்பாக்கியால் சுடப்பட்டான். விக்டர் கூச்சலிட்டான், உதைத்து கீழே தள்ளப்பட்டான்.
“சத்தம் போட்டால் மீண்டும் குண்டுகள் உன்னை துளைக்கும்” என்று எச்சரித்தான் ரஷ்ய போராளி. விக்டர் வலியால் முனகினான். பல துப்பாக்கி குண்டுகள் விக்டரின் இடுப்பு மற்றும் மார்பில் பாய்ந்தது. முழங்கால்களை ஊன்றி நகர முயற்சித்தான். இரத்தத்தில் வழுக்கினான். “நெடியா.. நெடியா” என்று மெலிந்த குரலில் முனகிக்கொண்டே கண் மூடினான். அந்த ரஷ்ய சிப்பாய் பேஸ்மெண்ட்டிற்கு இறங்கி சென்று அறை கதவை துப்பாக்கியால் தட்டினான். மேல் நோக்கி இரு முறை சுட்டான். மிஷா “இர்வின், மேக்ஸிம் மற்றும் மிலாவை நோக்கி உதடுகள் மேல் விரல் வைத்து சமிக்ஞை செய்தாள்”. நெடியாவை தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். “இங்கு யாரும் இல்லை” என்று சொல்லி அந்த ரஷ்ய போராளி வெளியேறினான். நான்கு மணி நேரம் கழிந்தது. அறையை விட்டு மெதுவாக வெளியே வந்தாள் மிஷா.
படியில் உருண்டு வந்த பாட்டில்களை எடுத்து கொண்டு விக்டரை கூப்பிட்டுப் பார்த்தாள் மிஷா. அதற்குள் மழை பெய்வது போல் குண்டு வெடிப்புகளும், துப்பாக்கிச் சூடும் நிகழ்ந்தன. விக்டரின் நிலை அறிய இயலாது கலங்கிப் போனால் மிஷா. அந்த பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்கள் உக்ரைன் சிப்பாய்களும் ரஷ்ய வீரர்களும் போரிட்டனர். பேஸ்மெண்ட்டில் மின்சாரம் துண்டித்து போனது. மிஷா ,மிலா, பிள்ளைகள் அனைவரும் இரு நாட்கள் தண்ணீரை மட்டும் குடித்து வாடிப் போயிருந்தனர். போரின் நெடிப்பு குறைந்து சற்று அமைதி நிலவியது. உக்ரைன் சிப்பாய்கள் மிஷா குடும்பத்தினரை அஸோவ்ஸ்டால் என்ற இடத்தில் உள்ள பெரிய இரும்பு ஆலைக்கு மற்ற மக்களுடன் அழைத்து செல்ல முற்பட்டனர். மிஷா “விக்டர்! விக்டர்!” என்று கதறிய படி வீட்டிலும் வீட்டை சுற்றிலும் தேடினாள், வீட்டின் முன் ஒருவர் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
பதறிப்போய் அவரை தள்ள முயற்சித்து அவர் விக்டர் அல்ல என்பதை உறுதி செய்தாள். “ஹி இஸ் ப்ரீத்திங்! ” என்று கத்தினாள். சிப்பாய்களுடன் சேர்ந்து அவரை வாகனத்தில் ஏற்றினாள். நேரக் குறைவால் மிஷா மன்றாடியும், விக்டரை தேட விடாமல் ராணுவ வீரர்கள் அனைவரையும் மீட்பு வாகனத்தில் ஏற்றினார்கள். வழியில் காக்கை , குருவி போல் பிணங்கள் சாலையோரம் குவிந்து கிடந்ததை மிஷா கவனித்தாள். கொள்ளையர்கள் சேதமடைந்த வீடுகளில் புகுந்து பொருட்களை திருடி கொண்டிருந்தனர். அருகில் ஒரு பெண் தன் கணவன், இறந்து போன தன் மகனை புதைக்க சென்று அங்கிருந்து வர மனதின்றி இவளை மட்டும் இந்த வாகனத்தில் அனுப்பி விட்டார் என்று அழுது புலம்பியதை கேட்டாள். இரத்தம் தோய்ந்த தன் ஆடைகளையும், கைகளையும் பார்த்தாள். இரத்த வாடை அவளை குமட்டச் செய்தது. மிஷா கண்ட காட்சிகளும், கேட்ட பேச்சுக்களும் விக்டரை ஞாபகப்படுத்தியது. தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள் மிஷா.
மிஷா ஜன்னல் கண்ணாடியில் சாய்ந்து அசந்து கண் மூடினாள். அன்று மிஷாவின் மூத்த மகன் மேக்ஸிம்மின் பதினெட்டாவது பிறந்த நாள். அவள் பிள்ளைகள் மூவரும் பசி! பசி! என்று கூச்சிலிட்டு மிஷாவின் இமைகளை திறக்க முயன்றார்கள். மனிதன் தன் உறவுகளை இழந்து, மண், பொருட்களை விட்டு மீளா துயரம் அவனை சூழ்ந்தாலும்,பசி மற்றும் உறக்கத்திற்காக ஏங்கும் கடுந்தாகம் அவனது ஆறாம் அறிவின் பெருமிதத்தை உடைக்கத்தானே செய்கிறது. அவனை அற்பமாக்கி விடுகிறது. மிலாவிற்கு கீழ் முதுகு வலி ஆரம்பித்தது. அருகில் இருந்த மூதாட்டி இதை தெரிவித்து,பத்து நிமிடங்களில் அவர்கள் செல்லும் வழியில் மருத்துவ அவசர ஊர்தி வந்து சேர்ந்தது. மிஷாவும் பிள்ளைகளும் அனுமதிக்க படாததால் மிலா மட்டும் ஊர்தியில் அருகில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தாள்.
மருத்துவமனைக்கு மிக அருகில் நெருங்கிய பொழுது,திடீரென விமானப்படை தாக்குதல் தொடங்கியது. குண்டுகள் தாக்கி அவசர ஊர்தி தடம் புரண்டு விழுந்தது. மிலா இரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அவளது இடது இடுப்பு மூட்டு விலகி இருந்தது. இரண்டு தொடைகளுக்கு இடையே இரத்தம் ஊற்றெடுத்து வந்தது. மிலா வின் மூச்சுக் காற்றில் வெப்பம் குறைந்தது, இதயம் பட்டாம்பூச்சியின் கடைசி நிமிட சிறகுகள் போல் வலுவிழந்து துடித்தது, இமைகள் காற்றில் ஆடும் விளக்கின் ஒளி போல் மெல்லியதாக அசைந்தது, வான்நிறமாக மாறினாள். மருத்துவர் வெரோனிகா “100 பர்ஸண்ட் ஆக்ஸிஜன்! ஸ்டார்ட் சி.பி.ஆர் ! ஐ அம் டூயிங் சி செக்ஸன் ரைட் நவ்! வீ ஹேவ் நோ டைம்! நோ டைம்! என்று உரக்க கத்தினார்.
நாற்பத்து இரண்டு நிமிட தாய், சேயின் உயிர் மீட்பு பணிகளுக்கு பின், மிலா மடிந்து போனாள். அந்த செய்தியை பகிர, உறவுகள் இல்லாத குறை நீக்க மிலாவின் பெண் குழந்தை பிழைத்தாள். போரின் நடுவே போராடி பிறந்தவள் இவள். இழவுச் செய்தி புரிந்து விட்டது போல, வன்முறையின் பரிசாக இன்னும் என்ன வேண்டும் உங்களுக்கு என்று கேட்பது போல, திணறலுடன் வீரிட்டு அலறியது அந்த பெண் சிசு ; அவள் அழுகைக் குரல் மனித அகங்காரத்திற்கு எட்டி விடும் போலும். விக்டர், மிலா வின் நிலை என்னவென்றே அறியாது இரும்பு ஆலையை சென்றடைந்தார்கள் மிஷாவும் பிள்ளைகளும். இரண்டு மாதங்கள் அங்கு கதிரொளியின்றி இருள் பற்றி இருந்தனர். ஒரு நாள் தண்ணீர் தேடி மிஷாவின் இரண்டாவது மகன் இர்வின் வெளியே சென்றான். பீரங்கிகள் முழங்கி ஆங்காங்கே நெருப்பு குவியல்களாய் இருந்தன. இர்வின் பயந்தோடி எங்கும் நீர் கிடைக்காமல், மாசு படிந்த பனி கட்டிகளை தன் சட்டைப் பையிலும், மடியிலும், கையிலும் எடுத்து சேகரித்தான். மிஷா தான் வைத்திருந்த மெழுகுவர்த்தியால் பனி கட்டிகளை சுட வைத்து தண்ணீரை பகிர்ந்து கொடுத்தாள்.
பிறகு இரும்பு ஆலையத்தில் தங்கியிருந்த மக்களுக்கு ஓர் அறிவிப்பு வந்தது “பதினெட்டு வயதிலிருந்து அறுபது வயது வரை உள்ள ஆண்கள் உக்ரைன் ராணுவ படைக்கும், போருக்கும் தயாராகுங்கள் ” என்று. மேக்ஸிம் ராணுவ வீரர்களுடன் அழைத்து செல்லப்பட்டான். வாள் பிடிக்க தெரியாதவனாயினும் போரில் மாய்ந்து போனால் அவன் வீர மரணம் அடைந்து பிறவிப் பயனை பெற்று விடுவானோ?! அடுத்த நாள் மிஷா, இர்வின் மற்றும் நெடியா மரியாபொல்லில் உள்ள அரங்கிற்கு வந்து அடைந்து விட்டார்கள். இத்தனையும் கேட்டு உறைந்து போயிருந்தாள் மைத்ரேயி. “என்னிடம் சில ஆடைகள் உள்ள பெட்டி ஒன்றுதான் இருக்கிறது. என் பிள்ளைகள் தான் என் வளங்கள். இருபது வருட கனவாக விக்டர் கட்டிய வீடு சுடுகாடு ஆனது” என்று கண் கலங்கினாள் மிஷா. நொடியில் கண்ணீரை துடைத்து”விக்டரும், மிலாவும் அவள் குழந்தையும் நலமாக இருப்பார்கள்” என்று மைத்ரேயியிடம் கூறி சிரித்தாள் மிஷா. ஒன்றும் புரியாது பார்த்த மைத்ரேயி அருகில் நெருங்கி வந்து மிஷா ” என் மகள் நெடியா நான் பேசுவதை கவனித்து கொண்டு இருக்கிறாள், அவள் முன் நான் அழுதிட இயலாது, நெடியாவிடம் நாம் வெவ்வேறு ஊர்களுக்கு சென்று ட்ரெஸர் ஹண்ட் விளையாடிக் கொண்டிருக்கிறோம், வெற்றி பெற பல சிரமங்களை சந்தித்தாக வேண்டும் , விரைவில் நம் வீட்டிற்கு சென்று விடலாம் என்று சொல்லியிருக்கிறேன்” என்று காதில் கிசுகிசுத்து புன்னகைத்தாள். நெஞ்சுரம் கொண்ட தேவதை இவள் என்று மிஷாவை நினைத்து நெகிழ்ந்து போனாள் மைத்ரேயி.
சில நாட்கள் கழிந்தன. இந்தியாவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள மைத்ரேயிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. “யாருடி? அம்மாகிட்ட பேச போறியா?” என்றாள் ஜெசி. இச்சு கொட்டி நாக்கை துருத்தி கொண்டு ..”இல்ல! சச்சு தாத்தாகிட்ட..”என்றாள் மைத்ரேயி.
தஞ்சை மாவட்டம் , சுந்தரம் நகரில் வசித்து வருகிறார் சச்சிதானந்தம் தாத்தா. காலை எட்டு மணி. அவரது செல்ஃபோன் ஒலித்தது. மூக்கு கண்ணாடியை சரி செய்து உத்து பார்த்தார். “வெளிநாட்டு நம்பர் மாதிரி இருக்கே!”
சச்சு : ஹலோ
மைத்ரேயி : தாத்தா.. நான் மைத்ரேயி பேசுறேன். சேஃபா இருக்கேன்
சச்சு: ஆ! மயிலு குட்டி, இத்தனை நாளா ஒன்னும் புரிபடல!…ஏய்! லச்சு.. நம்ம… ஹ…நம்ம! பேத்தி நல்லா இருக்காடி.. எனக்கும் உன் பாட்டிக்கும் கண்ணுலேந்து வர கண்ணீர கட்டுப்படுத்த முடியலடா தங்கம். ஆனா அந்த முருகன் பைய கனவுல வந்து சொல்லிகிட்டே இருந்தான்.. பயப்படாத எல்லாம் நல்லாதான் போகுதுனு.. கரெக்டா போச்சு! சொல்லு மைத்து, என்ன பண்ற, பாதுகாப்பா இருக்கியா..? சாப்பிட்டியா? எப்போ இந்தியா வர?
மைத்து: ம்ம்.. பரவால்ல தாத்தா. இங்க அணுகுண்டு சத்தம் தான் எனக்கு டெய்லி அலாரம்! இந்த அறுபது நாட்கள என்னால மறக்கவே முடியாது! இதுவரை ஏழு லட்சம் குடும்பங்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்காங்க! பல ஆயிரம் மக்கள் உயிரிழந்து, காயம் அடைந்து, அனைத்தையும் இழந்து நிச்சயமற்ற நிலையில இருக்காங்க!
சச்சு: ஆமா மைத்து.. நானும் நியூஸ்ல பார்த்தேன். ரொம்ப கொடுமைடா இது.
மைத்து: ஹ்ம்ம்! உனக்கு வெறும் நியூஸ் தான். எனக்கு ஒன்னும் புரியல தாத்தா.. பதவி, பொருள், சர்வாதிகாரம், மண்ணு .. இதெல்லாம் கிடைச்சதுக்கு அப்புறம் என்ன? அடுத்து என்ன இந்த மனுஷனுக்கு? சரி, பகுத்தறிவ பொறுத்த வரையில நம்ம பரிணாம வளர்ச்சி என்ன? ஒரு தனி மனிதன் எடுக்கிற முடிவால உலகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படுதுன்னா அப்போ அந்த தீய எண்ணங்களுக்கு காரணமாய் இருக்கிற ஜீன என்ன பண்ண முடியும்? சொல்லு!
சச்சு: டார்வின் இந்த காலக்கட்டத்துல இருந்திருந்தா..”Survival of the Evilest!! ” ன்னு சொல்லி இருப்பாரோ என்னவோ?
மைத்து: ஓவரா உருட்டுற! இன்னும் ரெண்டு நாள்ல வந்தே பாரத் ஃபலைட் புடிச்சு சென்னை வந்துருவேன். அப்பா, அம்மா கிட்ட நீயே சொல்லிடு. நான் அவங்க மேல கோவமா இருக்கேன். நம்ம நாட்டுல என்ன படிப்பு இல்லைன்னு என்ன இங்க அனுப்பினாங்க?..ஓகே, பை!
மைத்ரேயியும், ஜெசியும், இந்தியா செல்லும் விமானத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். மைத்ரேயி தன் பெட்டியில் இருந்த லெஹங்காவை கையில் எடுத்து ஏதோ யோசித்து கொண்டிருந்தாள். ” அடிப்பாவி! உன் உயிரே போனாலும் இந்த லெஹங்காவ விட மாட்டியே? அந்த அவசரத்துல இத எப்படி பேக் பண்ண?” என்று கேட்ட ஜெசியை பொருட்படுத்தாமல் மைத்ரேயி லெஹங்காவை எடுத்துக்கொண்டு வேகமாக நடந்தாள். நெடியா அருகில் சென்று தன்னுடைய லாவண்டர் லெஹங்காவை நெடியாவிற்கு போர்த்தி விட்டு” இது ட்ரெஸர் ஹண்ட்ல உனக்கு கிடைத்த பரிசு! ” என்றதும் ” யே! யே! லுக் அட் திஸ் மம்மி! வீ வொன்! வீ வொன்!” என்று குதித்தாள் சிறுமி நெடியா. அவளை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள் மைத்ரேயி.இர்வினிடம் ” உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டாள் மைத்ரேயி. ” நான் ராணுவ வீரனா ஆகனும்” என்றான். மைத்ரேயி மிஷாவை பார்த்து அவள் கைகளை இறுக்கமாக பிடித்து, சிறுநகையோடு, இவர்களுக்கும் ஒரு மீட்பு விமானம் வரக் கூடாதா? தீது போய் நன்று வாராதா? என்று நினைத்து விடைபெற்றாள்.
மண்ணால் உருவாகி
மண்சொந்தம் கொண்டாடி
உலகப் போர்கள் நடத்தி
தன் இனப்படுகொலை செய்து
மண்ணுக்கு இரையாக்கி
போரில் வெற்றி பெற்று
மண்ணிடம் தோற்று போகின்றான்!!
வசந்த் சுகுமார்
Editors:ஆர்த்தி வசந்த்,பரணீதரன்
குளத்தூர்பட்டி மையத்தில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளி. திங்கட்கிழமையின் உற்சாகம் பள்ளியெங்கும் மலர்ந்து கொண்டிருந்தது. எட்டாம் வகுப்பு அரையாண்டு தேர்வின் முதல் நாள். முதல் நாளன்று ஆங்கிலத்தேர்வு. பளிச்சென்று பள்ளிச் சீருடையுடன் பூபதி வகுப்பறைக்குள் நுழைந்தான். “டேய் மூர்த்தி! என்ன புத்தகத்தை வச்சிகிட்டு முனகிக்கிட்டே இருக்க, இன்னும் அரை மணி நேரத்துல பரிட்சை ஆரம்பிச்சிடும்.. ரெடியா?”
சுருட்டை முடியில் பின்னல் போட்டுக்கொண்டே “அதான் நீ இருக்கியே! எனக்கு முன்னாடி மட்டும் உட்காரு மத்த விஷயத்த நான் பாத்துக்குறேன்” என்றான் மூர்த்தி.
“மச்சி ,நேத்து நைட் ஷோ.. காதலன் படம்! நம்ம மேலத்தெரு பசங்களோட அண்ணாச்சி கடையில ஆளுக்கு மூனு ஆஃப்பாயில சூடா சாப்பிட்டு ஓடுனோம் பாத்துக்க. ஒரு பிகரு கூட தேறல, ஆனா சூப்பர் படம் மச்சி..லவ்வுக்காக ஹீரோ என்னா அடி வாங்குறான்யா! நம்ம வயசு பசங்க பாக்க வேண்டிய படம்..ஹம்ம்ம்” என்று மூர்த்தி இழுத்த மூச்சில் ஏக்கங்கள் மிகையாகவே இருந்தன. அருகில் நின்று கொண்டிருந்த கார்த்தி “ஓஹோ! அப்படியா? The tiger in the tunnel படிச்சியா, அந்த கதையிலையும் ஒரு ஹீரோ தியாகம் பண்ணுறாரு, இன்னிக்கு கட்டாயம் கொஸ்டின் வரும்”
“ப்ப்..ப்…பா… வந்துட்டான் டா, அப்பா மாதிரியே பேசுறதுக்கு.. டேய் கார்த்தி உன்ன மாதிரி பழசட்டிய எண்ட்டரண்சு எஜ்ஜாம் வைக்காம கடைசி பெஞ்ச்சுல சேத்தது தப்பா போச்சு” என்று கார்த்தியை ஏளனமாக பார்த்தான் மூர்த்தி. கார்த்தி பணிவது போல “என்னா ஜாம் ஐயா?” என்று மூர்த்தியை கேலி செய்தான்.
போடா! என்று விழிகளை பெரிதாக்கிய மூர்த்தி “டைகரு..டனலு?…டே பூபதி.. நீ படிச்சிட்டல்ல?.. ஏன்டா கார்த்தி, இந்த பாடக் கதையெல்லாம் சினிமாவா எடுத்தா பாத்துட்டு வந்து எழுத வசதியா இருக்கும்முல ?” என்றதும் மூர்த்தியை தலையில் தட்டி “வனிதா மிஸ் இப்ப வருவாங்க, நீயே கேளு”என்றான் பூபதி.
“டேய் பூப்ஸ்! உன் ரூட்டு ராதிகா கிட்ட உட்காந்து போன தடவ மாதிரி சொதப்பிடாதடா!” என பூபதியிடம் கைகூப்பினான் மூர்த்தி. அசடு வழிந்த பூபதி “மூர்த்தி.. நம்ம தமிழ் வருவான்ல…அவன புடி, காப்பி அடிக்கரத்துக்கு” என்றான். முகத்தை சுழித்த மூர்த்தி “அவன் சரியான பயந்தாங்கொள்ளி டா! ஷெரின் மிஸ் நம்மள திருத்த அந்த பழப்பயல கடைசி பெஞ்ச்சுல உட்கார வச்சாங்க.. ஆனா இப்பதான் பயல தேத்திகிட்டு இருக்கேன்”
“அடேய்! வேலைய காட்டிட்ட போல” என்று மூர்த்தியை நோக்கி கண்களை சுருக்கினான் பூபதி. “போன வாரம்.. புதுசா..சுட சுட! ஒரு கெட்ட வார்த்த சொல்லி கொடுத்திருக்கேன்.. அதுக்கு என்ன அர்த்தம்..என்ன அர்த்தமுன்னு தினமும் கேட்டு பய துடிப்பா துடிக்கிறான் பாத்துக்க.. சொல்லலயே! சஸ்பென்சுல வச்சிருக்கேன்.. எப்..ப்..பூடி?”என்று பதக்கம் வென்ற பெருமிதம் போல் முடியை கோதினான் மூர்த்தி. தூ! என்று சமிக்ஞை செய்தான் பூபதி.
அச்சோ! வனிதா மிஸ் வந்துட்டாங்க.. தென்றல் தள்ளிய சாரல்களாய் நெற்றிஓர வியர்வை, வழித்து வாரிய கூந்தல், கன்னங்கள் தாங்கி நிற்கும் வட்ட வடிவ கண்ணாடி, பூத்துவிட காத்திருக்கும் சிகப்பு ரோஜா மொட்டாய் புருவங்கள் இடையே குங்குமம், கரிய மையில் நீராடிய இமைகளின் தாளத்திற்கு மெல்லிய நடனம் ஆடும் ஜிமிக்கிகள், மௌனமான குளத்தின் மையத்தில் விழும் மழைத்துளியின் அதிர்வுகளாய் உதட்டின் புன்னகை அவளது முகமெங்கும் படர..சிட்டுப் பறவையாய் வகுப்பறைக்குள் நுழைந்தாள் வனிதா மிஸ். வனிதா மிஸ் வகுப்பின் அனைத்து மாணவ மாணவிகளின் மதிப்பிற்கு உரியவள், லட்சுமியம்சம் கொண்டவள்!
வனிதா மிஸ் கணீர் குரலில் “Morning students! Dhivya, please distribute the test note books to all” என்றதும் தேர்வு தொடங்கியது. மூர்த்தி பல முத்திரைகள் காட்டியும் , கூத்துக்கள் ஆடியும் பூபதி மூர்த்தியை கண்டு கொண்டதாக தெரியவில்லை. தேர்வும் முடிந்தது. “என்ன மூர்த்தி பின்னிட்ட போல” என்று கேட்ட கார்த்தியிடம் தன் கட்டை விரலை உயர்த்தி இலித்தான் மூர்த்தி. எந்த சினிமா கதைய எழுதி வச்சானோன்னு கார்த்தியின் மைன்ட் வாய்ஸ் சந்தேகிக்க “ஆமா! பால்டிவோ புலியை பார்த்ததும் என்ன பண்ணிணார் ?ங்கற கேள்விக்கு என்ன பதில் எழுதின மூர்த்தி? என்று கேட்டான். ” உதட்டை பிதுக்கி சலித்து கொண்ட மூர்த்தி “என்ன பெருசா பண்ணிருக்கப் போறான் ரெண்டு செருப்பையும் கையில எடுத்துக்கினு ஓடிருப்பான்….கார்த்தி, ஒரு தடவ நம்ம ஸ்கூல் முக்குல தீனி விக்கிற ஆயா கிட்டேந்து கொடுக்காப்புளி திருடிட்டு, செருப்ப கழட்டிக்கினு நாம ரெண்டு பேரும் ஓடுனோம்முல..அந்த மாதிரி” ஹி்..ஹி என்று மூர்த்தி சிரித்து, கார்த்தியையும், பூபதியையும் தரையில் புரண்டு சிரிக்க வைத்தான். அடப்பாவி! புலிய கொன்னு உயிர் தியாகம் பண்ணவருடா பால்டிவோ என்று கார்த்தி சொல்லியது ஏதும் கேளாமல், மூர்த்தி காதில் ஒலித்தது பள்ளியின் கடைசி மணி மட்டுமே!
பத்து நாட்கள் கழிந்தன. மற்ற தேர்வுகள் முடிந்து விடைத்தாள்களும் திருத்தப்பட்டு வகுப்பில் மதிப்பெண்களை கூறி டெஸ்டு நோட்டுக்களை கொடுத்து கொண்டிருந்தார் வனிதா மிஸ். “மூர்த்தி ! Show your hands !” என்று உருமியது அவர் குரல். மூர்த்தியின் உள்ளங்கையை பதம் பார்த்தது வனிதா மிஸ்ஸின் ஸ்கேல். காதலன் படம் ஞாபகம் வருதா மூர்த்தி குட்டி என்று கார்த்தி கிசு கிசுத்தான். தனது பூட்ஸ் காலால் கார்த்தியை உதைத்தான் மூர்த்தி. “Get ready to confess..principal is on the way ! “என்று ஓங்கி ஒலித்தது வனிதா மிஸ்ஸின் குரல். கேள்விக்குறியாக மாறிய மூர்த்தியின் முகத்தை பார்த்து “ஒன்னும் இல்லடா..அண்ணாச்சி கடை ஆஃப்பாயில் பத்தி உன்கிட்ட விசாரிக்க principal வராராம்” என்று பூபதியும், கார்த்தியும் மேசைக்கு அடியில் தலையை விட்டு மேசை அதிர குலுங்கி சிரித்தனர். நொடிக்கும் நேரத்தில் வகுப்பில் நடுச்சாம அமைதி. பூனை போல தலையை மெல்ல உயர்த்தினான் பூபதி. வகுப்பில் அனைவரும் நின்றிருந்ததை பூபதி உணர்ந்தான். பிரின்ஸிபால் சலீம் வகுப்பின் ஒரு மேசை மேல் அரசனைப் போல் அமரந்தார். வீமனை போன்ற உருவம், கரிய மீசை, நடையில் ஒரு மிடுக்கு, கர்ஜனையான குரல்..மாணவர்களை நடு நடுங்க வைக்கும் அணுகுமுறை.
“Sit down! Students.. நீங்க சொன்ன பையன் யாரு” என்று சலீம் வனிதா மிஸ்ஸிடம் கேட்டார். மூர்த்தி நடுக்கத்துடன் முன் வந்து நின்றான். “நீ என்ன தப்பு பண்ணினனு நீயே சொல்லு” என்று சலீம கேட்க “சார்”..விரல்களை பிண்ணிக்கொண்டே கூனி நின்றான் மூர்த்தி. சலீம் முகம் சிவந்தது. “Open your mouth.. you loser!”. மூர்த்தியின் இதயம் அவனது சட்டைப்பையில் குதித்து விடும் போல் பன்முக பயங்கொண்டு துடித்தது. மூர்த்தி பேச ஆரம்பித்தான். நெற்றியை மீண்டும் மீண்டும் விரல்களால் தேய்த்தவாறு, “சார்..நான் ஒன்னும் பண்ணல சார்!” “பொய் சொல்லாத!”என்று கண்டித்தார் சலீம். டெஸ்ட் நோட்டில் கேள்விக்கும் பதிலுக்கும் கையெழுத்து வேறுபாடு இருந்ததை மூர்த்தி அறியவில்லை. தான் எவ்வித தப்பும் செய்யாதது போல சலீமின் அனைத்து கேள்விகளுக்கும் பொய்களை அடுக்கிக் கொண்டே போனான் மூர்த்தி. “கையெழுத்து மாறியிருக்கு, ink மாறியிருக்கு, இதை விட முக்கியமா….” என்று சலீம் வனிதா மிஸ்ஸை நோக்கி வருத்தத்துடன் தலையை அசைத்து..”நீ எழுதின பதிலும் தப்பு” என மூர்த்தியிடம் சொன்னார். சில நொடிகள் சலீமின் கண்கள் ஒரு வெறுமையான பார்வையை மூர்த்தி மீது வைத்திருந்தன.
“உண்மைய சொல்லுடா!” என்று சலீமின் கை ஓங்கியது. வயிற்றை கலக்கியது மூர்த்திக்கு.. “சார்..பரிட்சையில் கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் தெரியல சார்..டெஸ்ட் முடிந்ததும் சப்மிட் பண்ண டெஸ்ட் நோட்ட யாருக்கும் தெரியாம பீரோலேந்து வீட்டுக்கு எடுத்துட்டு போய் பாடத்தை நல்லா படிச்சிட்டு பதில் எழுதினேன் சார்”
“அந்த கையெழுத்து அவன் தங்கையின் கையெழுத்து சார்..she is in 7th class” என்று குறுக்கிட்டது வனிதா மிஸ்ஸின் குரல்.வகுப்பில் மெல்லிய சலசலப்பு நிலவியது. மூர்ததியை பார்த்து காரி துப்புவது போல் பூபதியும், கார்த்தியும் சமிக்ஞை செய்தார்கள். பற்களை கடித்தான் மூர்த்தி. சலீம் பொறுமை இழந்தார்.”He thought that he executed a master plan, but failed.. தப்பு செய்ய என்னென்ன யோசனை, எத்தனை பொய், எத்தனை பித்தலாட்டம்.. .அப்ப…ப்ப்…பப்பா! உன் பெயர் என்னடா?” என்று சலீம் கேட்டதற்கு “மூர்த்தி.. சார்” என்று பதில் சொன்னான் மூர்த்தி . வகுப்பில் முனுமுனுப்பு அதிகரித்தது. என்ன சத்தம் என்று கேட்டார் சலீம். “ஃபுல் நேம்! ஃபுல் நேம்! “என்று கடைசி பெஞ்ச்சிலிருந்து கூச்சல் ஒலித்தது. “What’s your problem man? பெயர்ல கூட பொய்யா? உன் முழு பெயர சொல்லுடா…உன் பெயரை நான் மறக்கவே கூடாதுன்னு நினைக்கிறேன்” என்று சலீமின் ஆள்காட்டி விரல் அவரது நெற்றிப்பொட்டை தட்டி கொண்டே இருந்தது.
“சத்தியமூர்த்தி!!! சார்” என்று அவன் தயக்கத்துடன் பதில் சொன்னான். ‘கொல்’ என்ற சிரிப்பில் வகுப்பே அதிர்ந்தது. சலீமும் வனிதா மிஸ்ஸும் வெடித்து வரும் சிரிப்பை அடக்க முயன்று கொண்டிருந்தார்கள். நம்ம யாருமே இவன் பெயரை மறக்க முடியாது என்று மனதில் நினைத்து கொண்டே வனிதா மிஸ் வகுப்பை விட்டு வெளியேறினார். தலை தாழ்ந்து நின்றான் சத்திய மூர்த்தி.
பத்து வருடங்கள் ஆயிற்று என் கமலா பாட்டி எங்கள் அனைவரையும் பிரிந்து சென்று. பண்டிகைகள், திருவிழாக்கள், முழு ஆண்டு விடுமுறை நாட்கள் என்றால் நினைவுக்கு வருவது திருச்சியில் உள்ள என் கமலா பாட்டியும் அவர் வீடும் தான். பாட்டியின் பலகாரங்களும், மிகையான அன்பும், செல்லமான கடிதலும் அவரது எல்லா பெயரக் குழந்தைகள் மனதில் இன்றும் என்றும் செழிப்பான நினைவுகளை தரக்கூடியவை.
நான் விவரங்கள் அறிந்த நாள் முதல் இன்று வரை கண்ட இரும்பு மனிதர் அவர். எனக்கு தெரிந்த நல்லொழுக்கக் கதைகள் சொன்ன ஔவையும், தொண்டாற்றிய காரைக்கால் அம்மையும், ஓய்வின்றி உற்சாகமாக ஓடிய ஒலிம்பிக் தடகள வீராங்கனையும், நான் வாய்பிளந்து பார்த்த ஒண்டர் உமன் போராளியும் அவர் தான். அவள் கதை வரலாற்றில் சொல்லப்படாமலே போயிற்று!
கோடை விடுமுறையில் பாட்டி வீட்டு தோட்டத்தில் நாங்கள், பேரத்தலைமுறைகள் போட்ட ஆட்டம் அளவற்றது. அவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தவறாமல் எங்களை அழைத்து சின்ன அண்டாவில் “ரஸ்னா” கலந்து கொடுப்பதும், நாங்கள் வேகமாக அருந்தி விட்டு “இன்னொரு டம்ளர் வேணும் பாட்டி!”என்று போட்டியிட்டு கேட்டால் மீண்டும் புன்முறுவலுடன் டம்ளரை நிறைப்பதும் எங்கள் கமலா பாட்டி தான். அட்சய பாத்திரம் அந்த அண்டா மட்டுமல்ல என் கமலா பாட்டியின் மனமும் கூட! சாம்பார் சாதத்தை சூடாக நெய் மணக்க பிசைந்து பாட்டி கையால் ஊட்டி விட்டால் இறங்காத வயிற்றிலும் சோறு சரசரவென இறங்கும். பேரக்குழந்தைகள் முகம் வாடாமல் பார்த்து கொண்ட என் பாட்டி.. வயிறார சாப்பிட்டாரா? மனம் நோகாமல் இருக்கிறாரா? என்று கேட்டறியும் அறிவு அப்பருவத்தில் இல்லை என்ற வருத்தம் உண்டு. கமலா பாட்டி பச்சிளம் குழந்தைகளை நீராட்டுகையில் அவரது கைகள் வித்தைகள் காட்டும். பேரக்குழந்தைகள் நாங்கள் அனைவரும் குளித்த நவீன குளியல் தொட்டி என் பாட்டியின் முழங்கால்கள்தான்!
தீபாவளிக்காக கமலி (தாத்தா பாட்டியை இப்படித்தான் செல்லமாக கூப்பிடுவாராம்!) செய்யும் அறுசுவையான பலகாரங்கள் எல்லாமே மாஸ்டர் பீஸ்! தீபாவளி அதிகாலை ஆரம்பித்து அவர் செய்யும் பெருமாள் வடை, சுழியத்தின் இன்சுவை இன்றும் தீபாவளி நாட்களன்று நாவின் சுவை அரும்புகளை பட்டென்று தட்டி நினைவூட்டும். தகவலின்றி வீட்டிற்கு வரும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் முகிழ் நகையுடன் விருந்தோம்பினார் என் பாட்டி. செடி, கொடி, மரங்கள், நாய்க்குட்டி, கோழிகள், மாடுகள் இவை அத்துணை மீதும் கமலா பாட்டிக்கு அளவில்லா காதல். தன் பிள்ளைகள் போல் அன்பாக பார்த்து கொண்டு வளர்த்தவர். நாயன்மார்கள் சிவனுக்காக உருகி சரணடைந்தார்கள், என் கமலா பாட்டி தம்மக்களுக்காக சேவைகள் செய்து தன்னையே உருக்கி சமர்ப்பணம் செய்தவள். அவரை அடியார்களுக்கும் ஒரு படி மேல் வைத்து பார்க்கிறேன் நான்.
பேதை முதல் பேரிளம்பெண் வரை துணைவியாய், தாயாய், பாட்டியாய் அத்துணைகுடும்ப பதவிகளையும் சிறப்புறச் செய்துதெய்வமானவள் என் கமலா பாட்டி. பேரத்தலைமுறை எங்களின் “செல்ல டெடி” அவள். ஆனால் அவர் நலத்தை என்றுமே அவர் கவனித்து கொண்டதில்லை. சிறிய, பெரிய இடையூறுகள் எதுவானாலும் பாட்டிக்கு அவர் சொந்த நெறிமுறையில் உள்ள விந்தையான வைத்தியம் தான் உதவும். பித்தம் தீர்க்க பொவன்டோ, ஆற்றல் ஊக்குவிக்க பன்னீர் சோடா, டைம் பாஸுக்கு கோலி சோடா, தலைவலிக்கு கோடாளித் தைலம், நெஞ்சு வலிக்கு ஈனோ, கால் அரிப்புக்கு மெல்லிய சூட்டுடன் உள்ள காபி டம்ளரின் அடிப் பகுதியால் வருடுதல் என்று கமலா பாட்டியின் விசித்திரமானவைத்தியப் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.
கமலா பாட்டி கற்ற அறிவு குறைவெனினும், அவர் வாழ்வையும், தாத்தா; ஐந்து பிள்ளைகள்; பத்து பேரக்குழந்தைகள் என்று தன் பெரிய குடும்ப கப்பலை ஒரு கேப்டன் போல செம்மையாக வழி நடத்திச்சென்ற மிகச்சிறந்த ஆளுமை கொண்ட நுண்ணறிவாளி அவள். தனி ஆளாக பயணம் செய்வதற்கும், பாதைகளை நினைவில் வைத்து கொள்வதற்கும் துள்ளியமான ஜி.பி.எஸ் அவளிடம் இருந்தது! எண்கள் அறியாத கமலா பாட்டி, தொலைபேசியில் தனக்கென்று ஒரு குறியீடு முறையை வைத்து எவர் உதவியுமின்றி டயல் செய்யும் அறிவுநுட்பம் இன்றைய ஐ.ஓ.எஸ்(iOS) க்கு நிகரானது! தினசரி சமையலானாலும் சிறப்பு பலகாரங்களானாலும் பாட்டியின் விஞ்ஞான கருவிகள் அனைத்தும் அவள் கைப்பிடி தந்திரங்களும், ஆக்கத்திறன் கணக்கீடுகள் மட்டுமே! கமலா பாட்டி எங்கள் மரபணுவில் ஆழமாக பதித்து சென்ற வாழ்வியல் விழுமியங்களே இன்றும் நாங்கள் வாழ்வில் நெருக்கடியான தருணங்களில் வீழாமல் நிலைப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று நான் கருதுகிறேன்.
தியாகம் என்றறியாமலேயே தன் வாழ்கையை தன் அன்புக்குரியவர்களுக்காக தியாகம் செய்து ஒரு அழகான, முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து முடித்த அற்புதமான குடும்ப தலைவி என் கமலா பாட்டி! கமலா பாட்டி அவருக்கென்று என்ன செய்து கொண்டாள்? கமலா பாட்டியை இழந்த பின் நாங்கள் இழந்தது போர்க்களமான வாழ்வை வெல்லும் அறிவை சேமித்த கலைக்களஞ்சியத்தை, இலைகள் உதிர்ந்தாலும் வேர்களை இறுக்கி ஆண்டாண்டுகளாய் நிழல் தந்து எங்களை காத்த வலுவான மரத்தை, நெகிழ்திறன்; சகிப்புத்தன்மை; நடுவுநிலைமை என பல நற்பண்புகளை இயல்பென கொண்ட பொக்கிஷ நூலகத்தை…! என் கமலா பாட்டிக்கு நிகர் யார்? இவள் போல் எத்துணையோ குடும்பங்களில் வாழ்ந்த மற்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் கமலா பாட்டிகள் தானே! தேவதைகளுக்கு மறுபிறவி இல்லை. சொர்கத்திலும் பிறருக்கு ஆற்றும் அன்புப் பணியை தொடங்கியிருப்பார் கமலா பாட்டி!
ஐ லவ் யூ கமலி!
தன்னுடன் பாட்டியின் நினைவுகளை பகிர்ந்த பேரப்பிள்ளைகளின் பங்களிப்புடன்…
கோவிட்…இரண்டாவது அலை….. வாசிக்கும் செய்திகள், செய்தியில் காணும் காட்சிகள், நண்பர்கள், உற்றார், உறவினரின் தொலைபேசி அழைப்புகள், இவை அனைத்தையும் கேட்டு மனம் குழைகிறது. மனித வாழ்கையை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியுள்ளது இந்த நுண்ணுயிரி. என் மனதின் குமுறல்கள் இங்கே…
சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் காலையில் என் வீட்டின் அருகே உள்ள சிறிய அங்காடிக்குச் சென்றிருந்தேன். பொருட்களை வாங்கி வீட்டில் கொடுத்து வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் வேகமாக பொருட்களை தேடி எடுத்துக் கொண்டிருந்தேன். மூன்று நடுத்தர வயதுள்ள ஆட்கள் கடைக்குள் துரிதத்துடன் நுழைந்தார்கள். நரைமுடிகள் கொஞ்சம் துளிர்த்த தலையுமாய், சீர்ப்படாத தாடியுமாய் இருந்தார்கள்.
“அண்ணா! கப் இருந்தா குடுங்க ணா.. பேப்பர் கப் , பிளாஸ்டிக் கப் ஏதோ ஒன்னு, ப்ளீஸ்..சீக்கிரம் !” என்று அந்த மூவரில் ஒருவர் கேட்க “ இல்லைங்க, கப் எதுவும் இல்ல” என்றார் கடைக்காரர். “அண்ணா.. எதாவது டம்ளர் மாதிரி, கூஜா மாதிரி எதுவா இருந்தாலும் பரவால்ல” .. அவர் மீண்டும் கேட்டார். “நம்ம கிட்ட அந்த ஐடம்லா இல்ல தம்பி” என்று கடைக்காரர் சொன்ன பிறகும் அந்த மூவரில் இருவர் தலைமுடியை கோதிக்கொண்டு , தாடியை சொரிந்த வண்ணம், கம்மலின் திருகாணியை தொலைத்த மங்கையைப் போல செவியில் எதையும் உள்ளிழுக்காமல் கடை முழுவதும் உள்ள அலமாரிகளை ஒரு புரட்டு புரட்டி தேடிக்கொண்டே இருந்தார்கள். மற்றொருவர் கடை வாசலி்ல் நின்ற வண்ணம் நெற்றியை சுருக்கி, விரல்களை இருக்கி இச்சுக்கொட்டி “ ஓ காட்! நம்ம கார்ல ஒரு கப் கூட இல்லயே, பக்கத்துல வேற கடை இருக்குமா” என்று முனுமுனுத்து பரபரப்புடன் சுற்றிப் பார்த்தார். அவர்களது முகங்களில் நித்திரையிழந்த , சோர்வான தோற்றம் இருந்தது. எப்படியாவது இது வேண்டும் , எப்பொழுது கிடைக்கும் என்று அவர்கள் தவிப்பது போல் எனக்குத் தோன்றியது.
அந்த மனிதர்கள் இருந்த நிலையையும் , அவர்கள் கடைக்காரரிடம் பேசியதையும் கவனித்த நான் “ச்சே! என்ன மனுசங்கடா! காலையிலேயே சரக்கு அடிக்க கப் கிடைக்காம இப்பிடி அலையறானுங்க..போதைக்கு இப்படியும் அடிமைகள் இருப்பாங்களா?” என்று வெம்மையான வினா ஒன்றை என்னிடமே கேட்டுக் கொண்டேன். ஒரு நாளின் காலைப் பொழுதில் பெரும்பாலானோர்க்கு வேலைக்கு நேரத்திற்கு செல்ல வேண்டும் , நிறைவு அடையாத பணிகள் நிறைய இருக்கின்றனவே போன்ற எண்ணங்கள் மனதில் அலைமோதிக் கொண்டிருக்க..இந்த மனிதர்கள் காலை நேரத்தை இப்படி கடத்துகிறார்களே! என்று பெருமூச்சு விட்டேன். “ சரி.. இவனுங்க சரக்க அப்படியே குடிச்சு தொலைக்க வேண்டியது தானே.. எதுக்கு ‘கப்’புக்கு இப்பிடி ஏங்குறானுங்க..? ஓ.. மிக்ஸிங்க்கு தேவ படுமோ.. இந்த வேகமும் துடிப்பும் வேறு நல்ல விடயங்களுக்காக வரக்கூடாதா? அட குடிகார ஆசாமிகளா!”என்று என் மனம் விம்மியது.
அத்தருணத்தில் அந்த மூவரில் ஒருவர் அங்காடி ஊழியரிடம் “ இந்த ஆப்போஸிட்ல இருக்கிற டீ கடையில ஒரு பாட்டி நிக்குது பாருங்க..” என்று சொல்ல நானும் கவனித்தேன். குப்பைகளில் தேறுகிற பொருட்களை எடுத்து கிழிந்த சாக்கு ஒன்றில் அது வெடித்து விடும் நிலை வரை சேகரித்து, அதை இழுத்து வர வலுவில்லாத தோய்ந்த உடலுமாய், சுருங்கிய தோலும்; கண்களுமாய் ஒரு கிழவி காட்ச்சியளித்தார். குப்பை சாக்கை விட மிகையாக அவரது மேனி அழுக்குற்றும்; ஆடை கிழிந்தும் இருந்தது. அவர் தொடர்ந்தார் ..அந்த பாட்டி பசிக்குதுன்னு சொல்லுச்சு..சாப்பிட பிஸ்கட் வாங்கி கொடுத்து விட்டு குடிக்க தேநீர் கேட்டால் அந்த டீ மாஸ்டர் “இதுக்கு கிளாஸ்ல டீ குடுத்தா முதலாளி திட்டுவாரு, மத்த கஸ்டமர்ஸ் சத்தம் போடுவாங்க” ன்னு சொல்லிட்டான். பேப்பர் கப் கேட்டா அதுவும் இல்லனு சொல்லிட்டான். அவனோட அப்பன் ,ஆத்தாவா இருந்தா இப்படி செய்வானா?.. அந்த பாட்டிக்கு தான் கப் தேடிட்டு இருக்கோம் என்று சொன்னார்.
இந்த சமூகத்தில் ஒரு சாமானியரின் பசி எச்சில் கிளாஸிடம் தோற்றுப் போனது!
அவர்கள் பேசியது அனைத்தையும் கேட்ட பிறகு தாய்மொழியை வாசிக்க தெரியாவதனைப் போல் வெட்கித் தலை குனிந்தேன். கடைக்காரரிடம் பணத்தை செலுத்தி விட்டு வெளியே சென்று என் வாகனத்தில் அமர்ந்தேன். என்னைச் சுற்றி போக்குவரத்து நெரிசலின் பெரிதொலித்தல் இருந்தாலும் அடர்ந்த காட்டின் நடுவே தனிமையில் உட்கார்ந்திருப்பது போல் உணர்ந்தேன். தென்றல் தழுவாத ஒரு வெற்றிடத்தின் அமைதி என் மனதைத் தழுவியது. இயற்கையும் நானும் மட்டுமே அறிந்த அவமானத்தை உட்கொண்டு வண்டியை மெல்ல உருட்டினேன்.சக மனிதர்களை, உறவுகளை வியூகிக்கின்றோம். சில நொடிகளில் மற்றவரின் சொல், செயல், எண்ணங்களை தராசிலிட்டு உறுதியும் செய்கின்றோம். எங்கோ, யாரோ சிலர் செய்த அற்ப செயல்களை பார்த்தோ, அறிந்தோ நம் மனம் மற்ற மனிதர்களை வியூகம் செய்ய தொடங்குகின்றது. நாம் எப்பொழுதும் நல்லவர்கள் தான் என்று நல்லவனுக்கு ஒரு அசத்தியமான வரையறை செய்து அதில் உள்ளடங்கி வாழ்கின்றோம். மேற்சொன்னது போன்ற நிகழ்வுகள் இது போன்ற உண்மைக்கு புறம்பான வரையறைகளை உடைத்தெரிகின்றது, நம்மை செப்பனிட உதவுகிறது.
சிறிதளவும் யோசிக்காமல் அந்த மனிதர்களின் மனங்களில் மென்மையான கண்ணாடிப் பொருளாய் இருந்த எண்ணங்களின் மதிப்பறியாமல் நான் சிதறல்கள் ஆயிரமாய் நொருக்கியது எவ்வளவு தவறு என்றெண்ணி என் மனம் மண்டியது. சமூகத்தின் திணிப்பால் மனிதனின் மனம் நொடிக்கும் குறைவான நேரத்தில் சக மனிதர்களை வியூகிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. அதுவன்று திறன். இது போன்று மற்றவரின் களங்கமற்ற மனங்களை உதாசீனப் படுத்தும் பண்பு , மனிதத்தை தக்கவைக்கும் சூழலை ஏற்ப்படுத்துவதன்று.. நான் சந்தித்த அந்த மூன்று மனிதர்களின் சொல் மற்றும் செயல்களுக்கான“அகப்பொருள்” விலைமதிப்பற்றது.
பள்ளிப் பருவத்தின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தற்பொழுது நினைவுகூர்கிறேன். குறிப்பாக எனது தொடக்கப்பள்ளியான “ லிட்டில் ஏஞ்சல்ஸ்” எனக்கு அளித்த பிறந்தநாள் நினைவுகள் என் மனதிற்கு மிக நெருக்கமானவை. அன்று ஐந்தாம்; ஆறாம் வகுப்பு காலங்களில் என் பிறந்தநாள் ஆவலாக துவங்கி இனிய நினைவுகளுடன் முடிவடையும். அது போன்ற ஒரு பிறந்தநாளின் நினைவுகளை உங்களுடன் பகிர்கிறேன்.
காலையில்.. கோரைப்பாயில் வெவ்வேறு திசைகளில் உருண்டு, போர்வையுடன் போர் செய்து, சுமையான இமைகளை திறக்க முயன்று, சோம்பல் முழுதாக நீங்குவதற்கு முன்னரே அம்மா, அப்பா மற்றும் அண்ணனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் காதில் ஒலித்தது. அன்று என் பர்த்டே என்றறிந்ததும் பள்ளி நாள் கூட உற்சாகமான நாளாக மாறிவிட்டது. “அம்மா எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு மா” என்று சொல்லி நான் அங்கும் இங்கும் பரபரப்பாக ஓட.. அம்மா என்னை நோக்கிய விதம்.. “ஏன்டா மத்த நாளுல எந்திரிடா, எந்திரிடா..ன்னு தொண்ட தண்ணி வத்த கத்துனா கூட அங்கப்பிரதட்சணம் பன்னுற மாறி உருண்டுகிட்டே இருப்ப..ஆனா இன்னிக்கு..” என்ற மைண்ட் வாய்ஸ் நன்றாக புரிந்தது. அன்று மட்டும் நான் பள்ளிக்கு கிளம்புவதில் ஆர்வமும் வேகமும் இருந்ததற்கு காரணம் பல மகிழ்வான எதிர்பார்ப்புகளே..
குளித்தவுடன் பள்ளிச்சீருடையை ஏளனமாக பார்த்துவிட்டு, “அம்மா பர்த்டே டிரஸ் எங்க இருக்கு மா, சீக்கிரம்!” என்று கேட்டு அணிந்து கண்ணாடி முன்நின்று பார்த்தால் புனைகதையின் சூப்பர் ஹீரோ போல காட்சியளித்தேன். ஆஹா ..இன்னிக்கு என்ன ஸ்பெஷல் ? .. கட்டாயம் கேசரி இருக்கும், சாயங்காலம் குலாப் ஜாமுனும் கிடைக்குமா?.. என்ற துள்ளலுடன் அம்மாவின் சிறப்பு காலை உணவை ரசித்து ருசித்து பசியாறினேன். “இந்த டிபன் பாக்ஸ்ல கேசரி இருக்கு, பக்கத்துல உமா அக்கா வீட்டுல போய் குடுத்துட்டு வா, பிறந்தநாள் பரிசா பணம் குடுத்தா வாங்க கூடாது..என்ன?”என அம்மா சொன்னவுடன் நன்கு தலையாட்டினாலும், இனிப்பு கொடுத்து, வீட்டிற்கு வந்ததும் என் சட்டைப்பையில் பணம் இருப்பதை அம்மா அறிந்தார்.. “அம்மா… நான் வேண்டாம்..வேண்டாம்னு கதறியும் எப்படியோ என் பாக்கெட்ல பணத்த வச்சிட்டாங்க மா!” பக்கத்து வீட்டுல வேண்டாம்னு மெதுவா சொல்லி நடிச்சேன்னு யாருக்கு தெரியப்போது… ஸ்கூல்ல தீனி வாங்க பணம் வேணும்ல..என்றெண்ணி சிரித்தேன். பள்ளிப்பையில் சாக்லேட் பாக்ஸை எடுத்து வைத்துக்கொண்டு கிளம்பினேன். ஆட்டோ நண்பர்களுக்கு சாக்லேட் கொடுத்து பள்ளியில் நுழைந்தால் புத்தாடையைப் பார்த்து “ ஹப்பி பர்த்டே, காட் பிளஸ் யூ, பர்த்டே டிரஸ் சூப்பரா இருக்கு” என வகுப்பிற்கு செல்லும் முன்னரே பலரிடமிருந்து வாழ்த்துக்கள் வந்து குவிந்து மகிழ்ச்சி பொங்கச் செய்தது.
வகுப்பில் பிறந்தநாள் வாழ்த்து பாட்டு முடிந்தபின் வகுப்பினர்க்கும் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு வகுப்பாக சென்று சாக்லேட் கொடுப்பது எனது பள்ளியில் வழக்கமான ஒன்று. இந்த குறுஞ்சுற்றுலாவிற்கு துணையாக ஒரு தோழன் வருவதும் வழக்கம். சாக்லேட் தீர தீர பாக்ஸில் மீண்டும் நிரப்புவது, அவ்வப்பொழுது அவன் கொஞ்சம் சாப்பிடுவது, சிறிது அள்ளி அரைக்காற்சட்டைப்பையில் போட்டுக் கொள்வது.. இவைதான் இந்த பிறந்தநாள் தோழனின் தவறாத கடமைகள். “டேய்! மெதுவா போலாம் டா..இன்னும் ஒரு பிரியட் முடிஞ்சா லஞ்ச் பிரேக்..நான் வேற ட்ராயிங்க் ஹோம்வொர்க் பண்ணல! அந்த மிஸ்சு முட்டி போட வச்சு செம்ம அடி அடிப்பாங்கடா” என்று என் நண்பன் என்னிடம் சொல்ல மதிய உணவு இடைவேளை வரை சுற்றுலாவை மெல்ல நீட்டித்தோம்.
மணமகன் தோழன் போல இந்த “ பிறந்தநாள் தோழன்” கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த வழக்கம். பிறந்தநாள் தோழன் பதவிக்கு வகுப்பில் பல கலவரங்கள் நடந்தது உண்டு. நானும் என் நண்பர்களுக்கு பிறந்தநாள் தோழனாய் துணையாக சென்றிருக்கிறேன். அன்று வகுப்பில்.. மதியம் நான் செய்த குறும்பினால், ஆங்கில ஆசிரியை என்னை தண்டிக்க நேர்ந்தது..சட்டென்று வகுப்பில் பல குரல்கள் “மிஸ்! அவனுக்கு இன்னிக்கு பர்த் டே மிஸ்..” என்று கூச்சலிட்டு என்னை விடுதலை செய்தார்கள். அடடா! என்ன அருமையான நண்பர்கள். பள்ளியில் இருந்து வீடு திரும்பும் பொழுது.. இது போன்ற நாள் மீண்டும் வர ஒரு வருடம் ஆகுமே என்று முகம் வாடினாலும், இரவு வரை பிறந்தநாள் தொடரும் என்ற உற்சாகம் வழி நடத்திச்சென்றது. வீட்டிற்கு வந்ததும் அம்மாவுடன் கோவிலுக்கு சென்று, பள்ளி நிகழ்வுகளை பகிர்ந்து, இனிப்புகள் சாப்பிட, அந்த நாள் தித்திப்புடன் நிறைவு பெற்றது.
ஆனால் இன்றைய காலம் – சமீபத்தில் நண்பரது மகனின் எட்டாவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றிருந்தேன். அந்த பார்ட்டி ஹால் திருவிழா போல காட்சியளித்தது…வேடிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், பல வகை உணவுகள், குளிர்பானங்கள், அந்த சிறுவனை அச்சுறுத்தும் உயரமான கேக் இவற்றுடன். “ரிடர்ன் கிஃப்ட்” என்ற ஒரு வழக்கத்தை அன்று நான் அறிந்தேன். பிறந்தநாளிற்கு வரும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு பரிசு கொடுக்கும் வழக்கம். “இதெல்லாம் கௌரவப் பிரச்சனைங்க”..என்றார் என் நண்பர். மேலும் எனக்கு ஆச்சிரியமூட்டிய ஒன்று.. “ பர்த்டே தீம்”. அந்த அறை முழுவதும் ஸ்பைடர் மேன் படங்கள்; அலங்காரங்கள்; பின்னணி, ஸ்பைடர் மேன் கேக் மற்றும் குட்டி ஸ்பைடர் மேன் முகமூடிகளாக மாறிய குழந்தைகள்! அந்த பிறந்தநாள் சிறுவனும் ஸ்பைடர்மேன் போல ஆடை அணிந்திருந்தான். இந்த பையனோட அம்மா அப்பா மட்டும் ஏன் ஸ்பைடர் மேன் டிரஸ் போடல?.. என்றெண்ணி புன்னகையுடன் அவனுக்கு வாழ்த்து தெரிவித்து விடைபெற்றேன். அந்நாட்களில் எளிய முறையில் பிறந்தநாள் கொண்டாடிய குழந்தைகள்தான் இன்று பெற்றோர்களாக இருக்கிறார்கள். அன்று…அன்பு பரிமாற்றங்களும், பலகாரங்களும், பெரியோர்களின் ஆசியும், , வகுப்பில் கிடைத்த கவனமும், சின்னச்சின்ன சலுகைகளும் நிறைவான மகிழ்ச்சியை கொடுத்தன. இன்று…பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுவதும், வெகு நாட்கள் முன்னரே திட்டமிடுவதும், கௌவரவக்குறை அல்லாது இருக்க யோசிப்பதும் என அனைத்து முயற்சிகள் செய்த பின்னரும் “இன்னும் கிரேண்டா பண்ணிருக்கலாமோ? என்று மனநிறைவற்ற நிலையில் வருந்துகிறார்கள் இன்றைய பெற்றோர்கள். மேற்சொன்ன இந்த விந்தையான வழக்கங்கள் எவ்வாறு நம்மிடம் ஊடுருவியது; அரும்பும் சந்ததியினர்க்கு என்ன கற்றுக்கொடுக்கப் போகின்றது? நம் முன்னோர்கள் நமக்கு பரிசாக அளித்த பண்பாட்டின் கருப்பொருள் மெல்ல அழிந்து போகின்றதே! என்று மனதை கனமாக்குகிறது இந்த புதிய “பிறந்தநாள்கலாச்சாரம்”