நுண்ணுயிரியும் நானும்

கோவிட்…இரண்டாவது அலை….. வாசிக்கும் செய்திகள், செய்தியில் காணும் காட்சிகள், நண்பர்கள், உற்றார், உறவினரின் தொலைபேசி அழைப்புகள், இவை அனைத்தையும் கேட்டு மனம் குழைகிறது. மனித வாழ்கையை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியுள்ளது இந்த நுண்ணுயிரி. என் மனதின் குமுறல்கள் இங்கே…

நுண்ணுயிரியும் நானும்

காற்றில்லை…

கண்ணீர் உண்டு !

மருந்தில்லை….

மன்றாடல் உண்டு!

மருத்துவப் படுக்கை இல்லை…

மரணப்படுக்கை உண்டு!

இயல்நிலை இல்லை….

இறுக்கம் உண்டு!

அகக்கண் இல்லை…

முகக்கவசம் உண்டு!

இரவு நிச்சயமில்லை….

இடைவெளி உண்டு!

உறவுகள் இல்லை…

ஊரடங்கு உண்டு!

சுவை நாடி இல்லை…

சுடுகாட்டு வாசம் உண்டு!

அடுப்பெரிவதில்லை….

தடுப்பூசி உண்டு!

இயற்கை நேசம் இல்லை…

செயற்கை சுவாசம் உண்டு!

சாமானியனுக்கு வாழ்வாதாரம் இல்லை….

சந்தர்ப்பவாதிக்கு பொருளாதாரம் உண்டு!

திணறலுக்கு விடிவு இல்லை…

தேர்தலுக்கு முடிவு உண்டு!

சவங்களுக்கு பெட்டி இல்லை…

சிம்மாசனத்துக்கு போட்டி உண்டு!

உத்தமம் இல்லை…

மெத்தனம் உண்டு!

உணர்வுகளை புதைக்க கதி இல்லை….

உடல்களை எரிக்க விதி உண்டு!

மனிதம் உண்டோ ?

மகத்துவமும் உண்டோ ?

வசந்த் சுகுமார்

அகப்பொருள்

சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் காலையில் என் வீட்டின் அருகே உள்ள சிறிய அங்காடிக்குச் சென்றிருந்தேன். பொருட்களை வாங்கி வீட்டில் கொடுத்து வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் வேகமாக பொருட்களை தேடி எடுத்துக் கொண்டிருந்தேன். மூன்று நடுத்தர வயதுள்ள ஆட்கள் கடைக்குள் துரிதத்துடன் நுழைந்தார்கள். நரைமுடிகள் கொஞ்சம் துளிர்த்த தலையுமாய், சீர்ப்படாத தாடியுமாய் இருந்தார்கள்.

“அண்ணா! கப் இருந்தா குடுங்க ணா.. பேப்பர் கப் , பிளாஸ்டிக் கப் ஏதோ ஒன்னு, ப்ளீஸ்..சீக்கிரம் !” என்று அந்த மூவரில் ஒருவர் கேட்க “ இல்லைங்க, கப் எதுவும் இல்ல” என்றார் கடைக்காரர். “அண்ணா.. எதாவது டம்ளர் மாதிரி, கூஜா மாதிரி எதுவா இருந்தாலும் பரவால்ல” .. அவர் மீண்டும் கேட்டார். “நம்ம கிட்ட அந்த ஐடம்லா இல்ல தம்பி” என்று கடைக்காரர் சொன்ன பிறகும் அந்த மூவரில் இருவர் தலைமுடியை கோதிக்கொண்டு , தாடியை சொரிந்த வண்ணம், கம்மலின் திருகாணியை தொலைத்த மங்கையைப் போல செவியில் எதையும் உள்ளிழுக்காமல் கடை முழுவதும் உள்ள அலமாரிகளை ஒரு புரட்டு புரட்டி தேடிக்கொண்டே இருந்தார்கள். மற்றொருவர் கடை வாசலி்ல் நின்ற வண்ணம் நெற்றியை சுருக்கி, விரல்களை இருக்கி இச்சுக்கொட்டி “ ஓ காட்! நம்ம கார்ல ஒரு கப் கூட இல்லயே, பக்கத்துல வேற கடை இருக்குமா” என்று முனுமுனுத்து பரபரப்புடன் சுற்றிப் பார்த்தார். அவர்களது முகங்களில் நித்திரையிழந்த , சோர்வான தோற்றம் இருந்தது. எப்படியாவது இது வேண்டும் , எப்பொழுது கிடைக்கும் என்று அவர்கள் தவிப்பது போல் எனக்குத் தோன்றியது.

அந்த மனிதர்கள் இருந்த நிலையையும் , அவர்கள் கடைக்காரரிடம் பேசியதையும் கவனித்த நான் “ச்சே! என்ன மனுசங்கடா! காலையிலேயே சரக்கு அடிக்க கப் கிடைக்காம இப்பிடி அலையறானுங்க..போதைக்கு இப்படியும் அடிமைகள் இருப்பாங்களா?” என்று வெம்மையான வினா ஒன்றை என்னிடமே கேட்டுக் கொண்டேன். ஒரு நாளின் காலைப் பொழுதில் பெரும்பாலானோர்க்கு வேலைக்கு நேரத்திற்கு செல்ல வேண்டும் , நிறைவு அடையாத பணிகள் நிறைய இருக்கின்றனவே போன்ற எண்ணங்கள் மனதில் அலைமோதிக் கொண்டிருக்க..இந்த மனிதர்கள் காலை நேரத்தை இப்படி கடத்துகிறார்களே! என்று பெருமூச்சு விட்டேன். “ சரி.. இவனுங்க சரக்க அப்படியே குடிச்சு தொலைக்க வேண்டியது தானே.. எதுக்கு ‘கப்’புக்கு இப்பிடி ஏங்குறானுங்க..? ஓ.. மிக்ஸிங்க்கு தேவ படுமோ.. இந்த வேகமும் துடிப்பும் வேறு நல்ல விடயங்களுக்காக வரக்கூடாதா? அட குடிகார ஆசாமிகளா!”என்று என் மனம் விம்மியது.

அத்தருணத்தில் அந்த மூவரில் ஒருவர் அங்காடி ஊழியரிடம் “ இந்த ஆப்போஸிட்ல இருக்கிற டீ கடையில ஒரு பாட்டி நிக்குது பாருங்க..” என்று சொல்ல நானும் கவனித்தேன். குப்பைகளில் தேறுகிற பொருட்களை எடுத்து கிழிந்த சாக்கு ஒன்றில் அது வெடித்து விடும் நிலை வரை சேகரித்து, அதை இழுத்து வர வலுவில்லாத தோய்ந்த உடலுமாய், சுருங்கிய தோலும்; கண்களுமாய் ஒரு கிழவி காட்ச்சியளித்தார். குப்பை சாக்கை விட மிகையாக அவரது மேனி அழுக்குற்றும்; ஆடை கிழிந்தும் இருந்தது. அவர் தொடர்ந்தார் ..அந்த பாட்டி பசிக்குதுன்னு சொல்லுச்சு..சாப்பிட பிஸ்கட் வாங்கி கொடுத்து விட்டு குடிக்க தேநீர் கேட்டால் அந்த டீ மாஸ்டர் “இதுக்கு கிளாஸ்ல டீ குடுத்தா முதலாளி திட்டுவாரு, மத்த கஸ்டமர்ஸ் சத்தம் போடுவாங்க” ன்னு சொல்லிட்டான். பேப்பர் கப் கேட்டா அதுவும் இல்லனு சொல்லிட்டான். அவனோட அப்பன் ,ஆத்தாவா இருந்தா இப்படி செய்வானா?.. அந்த பாட்டிக்கு தான் கப் தேடிட்டு இருக்கோம் என்று சொன்னார்.

இந்த சமூகத்தில் ஒரு சாமானியரின் பசி எச்சில் கிளாஸிடம் தோற்றுப் போனது!

அவர்கள் பேசியது அனைத்தையும் கேட்ட பிறகு தாய்மொழியை வாசிக்க தெரியாவதனைப் போல் வெட்கித் தலை குனிந்தேன். கடைக்காரரிடம் பணத்தை செலுத்தி விட்டு வெளியே சென்று என் வாகனத்தில் அமர்ந்தேன். என்னைச் சுற்றி போக்குவரத்து நெரிசலின் பெரிதொலித்தல் இருந்தாலும் அடர்ந்த காட்டின் நடுவே தனிமையில் உட்கார்ந்திருப்பது போல் உணர்ந்தேன். தென்றல் தழுவாத ஒரு வெற்றிடத்தின் அமைதி என் மனதைத் தழுவியது. இயற்கையும் நானும் மட்டுமே அறிந்த அவமானத்தை உட்கொண்டு வண்டியை மெல்ல உருட்டினேன்.சக மனிதர்களை, உறவுகளை வியூகிக்கின்றோம். சில நொடிகளில் மற்றவரின் சொல், செயல், எண்ணங்களை தராசிலிட்டு உறுதியும் செய்கின்றோம். எங்கோ, யாரோ சிலர் செய்த அற்ப செயல்களை பார்த்தோ, அறிந்தோ நம் மனம் மற்ற மனிதர்களை வியூகம் செய்ய தொடங்குகின்றது. நாம் எப்பொழுதும் நல்லவர்கள் தான் என்று நல்லவனுக்கு ஒரு அசத்தியமான வரையறை செய்து அதில் உள்ளடங்கி வாழ்கின்றோம். மேற்சொன்னது போன்ற நிகழ்வுகள் இது போன்ற உண்மைக்கு புறம்பான வரையறைகளை உடைத்தெரிகின்றது, நம்மை செப்பனிட உதவுகிறது.

சிறிதளவும் யோசிக்காமல் அந்த மனிதர்களின் மனங்களில் மென்மையான கண்ணாடிப் பொருளாய் இருந்த எண்ணங்களின் மதிப்பறியாமல் நான் சிதறல்கள் ஆயிரமாய் நொருக்கியது எவ்வளவு தவறு என்றெண்ணி என் மனம் மண்டியது. சமூகத்தின் திணிப்பால் மனிதனின் மனம் நொடிக்கும் குறைவான நேரத்தில் சக மனிதர்களை வியூகிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. அதுவன்று திறன். இது போன்று மற்றவரின் களங்கமற்ற மனங்களை உதாசீனப் படுத்தும் பண்பு , மனிதத்தை தக்கவைக்கும் சூழலை ஏற்ப்படுத்துவதன்று.. நான் சந்தித்த அந்த மூன்று மனிதர்களின் சொல் மற்றும் செயல்களுக்கான“அகப்பொருள்” விலைமதிப்பற்றது.

வசந்த் சுகுமார்

செப்பனிட உதவியவர்கள்: பரணீதரன், ஆர்த்தி வசந்த்.

கலாச்சாரம்

பள்ளிப் பருவத்தின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தற்பொழுது நினைவுகூர்கிறேன். குறிப்பாக எனது தொடக்கப்பள்ளியான “ லிட்டில் ஏஞ்சல்ஸ்” எனக்கு அளித்த பிறந்தநாள் நினைவுகள் என் மனதிற்கு மிக நெருக்கமானவை. அன்று ஐந்தாம்; ஆறாம் வகுப்பு காலங்களில் என் பிறந்தநாள் ஆவலாக துவங்கி இனிய நினைவுகளுடன் முடிவடையும். அது போன்ற ஒரு பிறந்தநாளின் நினைவுகளை உங்களுடன் பகிர்கிறேன்.

காலையில்.. கோரைப்பாயில் வெவ்வேறு திசைகளில் உருண்டு, போர்வையுடன் போர் செய்து, சுமையான இமைகளை திறக்க முயன்று, சோம்பல் முழுதாக நீங்குவதற்கு முன்னரே அம்மா, அப்பா மற்றும் அண்ணனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் காதில் ஒலித்தது. அன்று என் பர்த்டே என்றறிந்ததும் பள்ளி நாள் கூட உற்சாகமான நாளாக மாறிவிட்டது. “அம்மா எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு மா” என்று சொல்லி நான் அங்கும் இங்கும் பரபரப்பாக ஓட.. அம்மா என்னை நோக்கிய விதம்.. “ஏன்டா மத்த நாளுல எந்திரிடா, எந்திரிடா..ன்னு தொண்ட தண்ணி வத்த கத்துனா கூட அங்கப்பிரதட்சணம் பன்னுற மாறி உருண்டுகிட்டே இருப்ப..ஆனா இன்னிக்கு..” என்ற மைண்ட் வாய்ஸ் நன்றாக புரிந்தது. அன்று மட்டும் நான் பள்ளிக்கு கிளம்புவதில் ஆர்வமும் வேகமும் இருந்ததற்கு காரணம் பல மகிழ்வான எதிர்பார்ப்புகளே..

குளித்தவுடன் பள்ளிச்சீருடையை ஏளனமாக பார்த்துவிட்டு, “அம்மா பர்த்டே டிரஸ் எங்க இருக்கு மா, சீக்கிரம்!” என்று கேட்டு அணிந்து கண்ணாடி முன்நின்று பார்த்தால் புனைகதையின் சூப்பர் ஹீரோ போல காட்சியளித்தேன். ஆஹா ..இன்னிக்கு என்ன ஸ்பெஷல் ? .. கட்டாயம் கேசரி இருக்கும், சாயங்காலம் குலாப் ஜாமுனும் கிடைக்குமா?.. என்ற துள்ளலுடன் அம்மாவின் சிறப்பு காலை உணவை ரசித்து ருசித்து பசியாறினேன். “இந்த டிபன் பாக்ஸ்ல கேசரி இருக்கு, பக்கத்துல உமா அக்கா வீட்டுல போய் குடுத்துட்டு வா, பிறந்தநாள் பரிசா பணம் குடுத்தா வாங்க கூடாது..என்ன?”என அம்மா சொன்னவுடன் நன்கு தலையாட்டினாலும், இனிப்பு கொடுத்து, வீட்டிற்கு வந்ததும் என் சட்டைப்பையில் பணம் இருப்பதை அம்மா அறிந்தார்.. “அம்மா… நான் வேண்டாம்..வேண்டாம்னு கதறியும் எப்படியோ என் பாக்கெட்ல பணத்த வச்சிட்டாங்க மா!” பக்கத்து வீட்டுல வேண்டாம்னு மெதுவா சொல்லி நடிச்சேன்னு யாருக்கு தெரியப்போது… ஸ்கூல்ல தீனி வாங்க பணம் வேணும்ல..என்றெண்ணி சிரித்தேன். பள்ளிப்பையில் சாக்லேட் பாக்ஸை எடுத்து வைத்துக்கொண்டு கிளம்பினேன். ஆட்டோ நண்பர்களுக்கு சாக்லேட் கொடுத்து பள்ளியில் நுழைந்தால் புத்தாடையைப் பார்த்து “ ஹப்பி பர்த்டே, காட் பிளஸ் யூ, பர்த்டே டிரஸ் சூப்பரா இருக்கு” என வகுப்பிற்கு செல்லும் முன்னரே பலரிடமிருந்து வாழ்த்துக்கள் வந்து குவிந்து மகிழ்ச்சி பொங்கச் செய்தது.

வகுப்பில் பிறந்தநாள் வாழ்த்து பாட்டு முடிந்தபின் வகுப்பினர்க்கும் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு வகுப்பாக சென்று சாக்லேட் கொடுப்பது எனது பள்ளியில் வழக்கமான ஒன்று. இந்த குறுஞ்சுற்றுலாவிற்கு துணையாக ஒரு தோழன் வருவதும் வழக்கம். சாக்லேட் தீர தீர பாக்ஸில் மீண்டும் நிரப்புவது, அவ்வப்பொழுது அவன் கொஞ்சம் சாப்பிடுவது, சிறிது அள்ளி அரைக்காற்சட்டைப்பையில் போட்டுக் கொள்வது.. இவைதான் இந்த பிறந்தநாள் தோழனின் தவறாத கடமைகள். “டேய்! மெதுவா போலாம் டா..இன்னும் ஒரு பிரியட் முடிஞ்சா லஞ்ச் பிரேக்..நான் வேற ட்ராயிங்க் ஹோம்வொர்க் பண்ணல! அந்த மிஸ்சு முட்டி போட வச்சு செம்ம அடி அடிப்பாங்கடா” என்று என் நண்பன் என்னிடம் சொல்ல மதிய உணவு இடைவேளை வரை சுற்றுலாவை மெல்ல நீட்டித்தோம்.

மணமகன் தோழன் போல இந்த “ பிறந்தநாள் தோழன்” கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த வழக்கம். பிறந்தநாள் தோழன் பதவிக்கு வகுப்பில் பல கலவரங்கள் நடந்தது உண்டு. நானும் என் நண்பர்களுக்கு பிறந்தநாள் தோழனாய் துணையாக சென்றிருக்கிறேன். அன்று வகுப்பில்.. மதியம் நான் செய்த குறும்பினால், ஆங்கில ஆசிரியை என்னை தண்டிக்க நேர்ந்தது..சட்டென்று வகுப்பில் பல குரல்கள் “மிஸ்! அவனுக்கு இன்னிக்கு பர்த் டே மிஸ்..” என்று கூச்சலிட்டு என்னை விடுதலை செய்தார்கள். அடடா! என்ன அருமையான நண்பர்கள். பள்ளியில் இருந்து வீடு திரும்பும் பொழுது.. இது போன்ற நாள் மீண்டும் வர ஒரு வருடம் ஆகுமே என்று முகம் வாடினாலும், இரவு வரை பிறந்தநாள் தொடரும் என்ற உற்சாகம் வழி நடத்திச்சென்றது. வீட்டிற்கு வந்ததும் அம்மாவுடன் கோவிலுக்கு சென்று, பள்ளி நிகழ்வுகளை பகிர்ந்து, இனிப்புகள் சாப்பிட, அந்த நாள் தித்திப்புடன் நிறைவு பெற்றது.

ஆனால் இன்றைய காலம் – சமீபத்தில் நண்பரது மகனின் எட்டாவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றிருந்தேன். அந்த பார்ட்டி ஹால் திருவிழா போல காட்சியளித்தது…வேடிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், பல வகை உணவுகள், குளிர்பானங்கள், அந்த சிறுவனை அச்சுறுத்தும் உயரமான கேக் இவற்றுடன். “ரிடர்ன் கிஃப்ட்” என்ற ஒரு வழக்கத்தை அன்று நான் அறிந்தேன். பிறந்தநாளிற்கு வரும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு பரிசு கொடுக்கும் வழக்கம். “இதெல்லாம் கௌரவப் பிரச்சனைங்க”..என்றார் என் நண்பர். மேலும் எனக்கு ஆச்சிரியமூட்டிய ஒன்று.. “ பர்த்டே தீம்”. அந்த அறை முழுவதும் ஸ்பைடர் மேன் படங்கள்; அலங்காரங்கள்; பின்னணி, ஸ்பைடர் மேன் கேக் மற்றும் குட்டி ஸ்பைடர் மேன் முகமூடிகளாக மாறிய குழந்தைகள்! அந்த பிறந்தநாள் சிறுவனும் ஸ்பைடர்மேன் போல ஆடை அணிந்திருந்தான். இந்த பையனோட அம்மா அப்பா மட்டும் ஏன் ஸ்பைடர் மேன் டிரஸ் போடல?.. என்றெண்ணி புன்னகையுடன் அவனுக்கு வாழ்த்து தெரிவித்து விடைபெற்றேன். அந்நாட்களில் எளிய முறையில் பிறந்தநாள் கொண்டாடிய குழந்தைகள்தான் இன்று பெற்றோர்களாக இருக்கிறார்கள். அன்று…அன்பு பரிமாற்றங்களும், பலகாரங்களும், பெரியோர்களின் ஆசியும், , வகுப்பில் கிடைத்த கவனமும், சின்னச்சின்ன சலுகைகளும் நிறைவான மகிழ்ச்சியை கொடுத்தன. இன்று…பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுவதும், வெகு நாட்கள் முன்னரே திட்டமிடுவதும், கௌவரவக்குறை அல்லாது இருக்க யோசிப்பதும் என அனைத்து முயற்சிகள் செய்த பின்னரும் “இன்னும் கிரேண்டா பண்ணிருக்கலாமோ? என்று மனநிறைவற்ற நிலையில் வருந்துகிறார்கள் இன்றைய பெற்றோர்கள். மேற்சொன்ன இந்த விந்தையான வழக்கங்கள் எவ்வாறு நம்மிடம் ஊடுருவியது; அரும்பும் சந்ததியினர்க்கு என்ன கற்றுக்கொடுக்கப் போகின்றது? நம் முன்னோர்கள் நமக்கு பரிசாக அளித்த பண்பாட்டின் கருப்பொருள் மெல்ல அழிந்து போகின்றதே! என்று மனதை கனமாக்குகிறது இந்த புதிய “பிறந்தநாள் கலாச்சாரம்”

வசந்த் சுகுமார்

செப்பனிட உதவியவர்கள் – பரணீதரன், ஆர்த்தி வசந்த்.

வரம்

ஐந்தாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறைக்காக திருச்சியில் உள்ள பாட்டி வீட்டிற்கு செல்ல அம்மா, அண்ணணுடன் நான் பேருந்து நிலையத்திற்கு சென்றேன். பள்ளிக் காலத்தில் பேருந்து பயணம் என்றாலே அத்தனை சிறப்பு. அன்று ஒருபுறம், அமைச்சர்கள் கட்சி பதவிகள் அறிவிப்பிற்காக பித்துப்பிடித்த நிலையில் காத்திருப்பது போல நான் ஜன்னல் ஓர இருக்கைக்காக காத்திருக்க.. மறுபுறம், உப்பும் மிளகாய் பொடியும் தூவிய வெள்ளரிக்காய்! காகிதக் கூம்பு பொட்டலத்தில் கைகளுக்கு இதமான சூட்டுடன் கிடைக்கும் கடலை! , மணப்பாறை முறுக்கு!..இவை எல்லாம் விற்றுக் கொண்டு வருவார்களே என்ற ஏக்கத்தில் இருந்தேன்.

புறப்படத் தயாரான நிலையில் உள்ள பேருந்தில் விரைவாக ஏறினேன். கனவுகள் சிதறியது. “ அம்மா! இடமே இல்ல மா! நம்ம வேற பஸ்ல போகலாம்” என்றதும் அம்மா மறுக்க..நின்று கொண்டே துயரத்துடன் பயணம் தொடங்கியது. அடுத்த நிறுத்தத்தில் சற்று நெரித்தல் குறைந்தது. “ வா தம்பி! உட்காரு” என்று அழைத்தார் ஒருவர். நடுத்தர வயது, பெரிய உருவம், சேதமடைந்த வர்ண தூரிகை போல மீசை, முகத்தில் ஆங்காங்கே கருந்தழும்புகள், சுருள் சுருளாகவும் பஞ்சு மிட்டாய் போலவும் தலை முடி! ( Afro hair style). ஒட்டு மொத்தமாக அந்த மனிதரை பார்க்கையில்..90 களில் தமிழ் திரைப்படங்களில் கொடிய வில்லனின் உத்தரவை “எஸ் பாஸ்!” என ஏற்கும் அடியாட்களில், கட்டாயம் ஒரு ஆப்பிரிக்கா தலையன் இருப்பான்அல்லவா?..அவன் போலவே எனக்கு தோன்றியது. அம்மா சொன்னாலும், பீதியுடனே அவர் அருகே அமர்ந்தேன். இந்த ஆளு எதுக்கு என்னையே பாத்துக்கிட்டு இருக்காரு? என்று நினைத்தேன். தம்பி ! உன் பெயர் என்ன? என ஆரம்பித்து பல கேள்விகள் தொடர்ந்தது, அனைத்திற்கும் ஒரு வார்த்தை பதில்களாக சொல்லி கொண்டே இருந்த எனக்கு “என்ன ஸ்டாண்டர்ட் படிக்கிற?” என்று அவர் என்னிடம் கேட்டதும் புது ஆளுங்க கிட்ட விவரங்கள் எல்லாம் சொல்லக் கூடாதுன்னு அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. “ஏழாம் வகுப்பு படிக்கிறேன்னு பொய் சொல்லிட்டா..இவன் பெரிய பையன், இவன் கிட்ட எந்த வம்பும் வச்சிக்க கூடாது பா! அப்படின்னு அந்த ஆளு நினைச்சிடுவாரு” என்று எண்ணியது போலவே பதில் சொல்லிவிட்டு மகிழ்ந்து கொண்டேன்.

சிறிது நேரம் கழிந்தது. அவர் தன் சட்டைப் பையில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து.. உரத்த குரலில்“ இதோ பாத்தியா!..இவரு தான் எங்க தலைவரு ! என்று சுட்டி காட்டினார்.. அந்த புகைப்படத்தைப் பார்த்ததும் எனது இதயம் பல முறை வேகமாக துடித்தது! நெற்றியில் வியர்வைத் துளிகளின் நெருடலை உணர்ந்தேன். “ இந்த ஆளு மண்டையும் அந்த போட்டோல உள்ளவரின் மண்டையும் ஒரே மாதிரி இருக்கே !…இவங்க யாரு? புள்ள புடிக்கறவங்களா?” என்று நினைத்துப் பதறினேன்.“ யாரையோ போட்டோல காட்டி தலைவரு” ன்னு சொல்லுறாரு, ஊரு; பெயர் எல்லாம் கேட்டாரு… ஐயோ! இந்த ஆளு கொடுத்த கடலைய வேற சாப்பிட்டுட்டேனே?!.. எனக்கு இருந்த ஐயத்தை உறுதி செய்தேன். இந்த தடியன்.. நிச்சயம் என்ன கடத்தப் போறான்! மயக்கம் வரத்துக்குள்ள அம்மா கிட்ட ஓடிறனும்!..என்று, அச்சத்தில் பல கோணங்களில் எண்ணத் தொடங்கினேன். உடனே அம்மாவை தேடினேன், கூட்டத்தில் காண இயலவில்லை. சில நொடிகளில் அடுத்த நிறுத்தம் வந்தது.பாய்ந்து ஓடி அம்மாவின் அருகிலேயே கிடைத்த இடத்தில் உட்கார்ந்தேன். ஏதும் சொல்லாமல் அம்மாவின் மடியில் சற்று இளைப்பாறினேன்.

திருச்சியில் பேருந்தில் இருந்து இறங்கும் பொழுது அந்த மனிதரின் இருக்கை வெற்றிடமாக இருந்ததை உறுதி செய்த பின் தூவானத்தில் ஆடுவது போல் மகிழ்வுடன் பாட்டி வீட்டிற்கு சென்றேன். பாட்டி செய்த தின்பண்டங்களின் தூண்டலால் எனது சுவையின் உயர் மையம் கலங்கிப் போக!..இந்த நிகழ்வின் அச்சுறுத்தல் என் நினைவை விட்டு நீங்கியது. சில வருடங்களுக்குப் பின் ஒரு நாள் தொலைக்காட்சி மற்றும் நாளிதழில், அன்று அந்த நபர் காட்டிய புகைப்படத்தில் இருந்த மனிதரைப் பார்த்தேன்..”அட! அந்த ஆசாமியே தான்! அன்று பார்த்த அதே முழுநீள காவி உடை, சுருட்டை முடி!..”அம்மாவிடம் அவர் யார் என்று கேட்டதும் “இவரு ஒரு சாமியார் டா! என்று சொன்னார். பிறகு அவர் ஒரு பிரபலமான “ஆன்மீக குரு” என்றும் அவரது நிறுவனம் பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல் படுத்தி வருகிறது என்றும் அறிந்தேன்!.. பேருந்தில் என்னுடன் பயணம் செய்த அந்த நபர் இந்த ஆன்மீக குருவைப் பின்பற்றுபவராக இருந்திருக்க வேண்டும் !.. “என்னக் கொடுமை சரவணன்!!!”. சிறு வயதின் அறியாமையும், தற்செயலாக நடந்த நிகழ்வுகளும் அன்று மனதில் எத்தனைத் திருவிளையாடல்கள் செய்திருக்கின்றன என்றெண்ணி நான் இன்றும் சிரிப்பது உண்டு. மேலும் ஒரு மனிதனின் தோற்றத்தை வைத்து அவரை பற்றி தவறாக எண்ணியதை நினைத்து வருந்துவதும் உண்டு.

என்றாலும் “ பத்து வயசு பையன்கிட்ட ..ஒரு ஆன்மீக குருவை இப்படியா ஒரு மனுசன் அறிமுகப்படுத்துவார்?” என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நம் சிறு வயதில்… “அறியாமை” என்ற ஒன்று , மேற்ச்சொன்ன நிகழ்வு போன்ற புரியாத அச்சங்கள் சிலவற்றை கொடுத்து, பின்நாளில் அவற்றையே மலரும் நினைவுகளாக மாற்றியதோடு அல்லாமல், எண்ணற்ற தருணங்களில் .. “ ஒரு இனிமையான, கவலை அறியாத, எல்லைகளற்ற உலகத்தை வரமாக அளித்துள்ளது.

அறியாமை ஒரு “வரம்”

வசந்த் சுகுமார்

செப்பனிட உதவியவர்கள்: பரணீதரன், ஆர்த்தி வசந்த்.

முதல் மைல்கல்

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சராசரி நாள், நண்பர்கள் நாங்கள் மூவரும் திருச்சியில் சந்தித்தோம். 11ஆம் வகுப்பு, படிப்பு சுமை குறைவு; மாலை வேலைகளில் இவ்வாறு சந்திப்பது வழக்கம். “கோவிலுக்கு போய் வந்தாச்சு, கொஞ்ம் தீனி கொறித்து அளவில்லா அரட்டையும் அடிச்சாச்சு! சரிடா.. எல்லாம் கிளம்புவோமா!” என்று விடை பெற..நாங்கள் நடந்து வந்த பாதையில் என் நண்பன் ஶ்ரீராம் காலில் தட்டியது ஒரு பொருள். தெரு விளக்கின் மங்கிய ஒளியில் அது என்னவென்று அறிய மூவருக்கும் ஆர்வம். “ஏதோ ஒன்னு கீழ கிடக்குடா”.. அதை கால்பந்து போல் தட்டி ஶ்ரீராம் முன்னேறிய போது அறிந்தோம் “ டேய்! பர்ஸ் டா!”. சில நொடிகள் பதட்டமும் மௌனமும் சூழ்ந்தது.

“இப்போ என்னடா பன்னுறது”. . என்று எண்ணி முடிக்காத நிலையில் என் நண்பன் அந்த பர்ஸை கையில் எடுத்தான். “ உள்ள பைசா இருக்கு, போட்டோவும் அதுக்கு பின்னாடி முகவரியும் இருக்குடா.. எனக்கு நேரம் ஆச்சு! நான் வீட்டுக்கு கிளம்புறேன்..பேசாம இந்த பணத்தை உண்டியல்ல போட்டுறுங்கடா..” என்று சொல்லி பேருந்தில் ஏறினான் ஶ்ரீராம். கையில் அந்த பணப்பையுடன் நானும் மற்றொரு நண்பன் வசந்த்தும் நடந்து கொண்டே பேருந்து நிறுத்தம் வரை மட்டுமே கிடைத்த சில நமிடங்களில் ஒரு தீர்வு கண்டோம். வசந்த் சொன்னான் “பாருடா இந்த பைய நம்ம கையில குடுத்துட்டு ஓடிட்டான்..இத எடுக்காமலே விட்டுருக்கலாம்..ம்ம்ம்..சரி! நமக்கு நாளைக்கு லீவ் தானே ! இந்த பர்ஸ நேரா போய் குடுத்துட்டா?.

நான் சற்று யோசித்தேன். “பாட்டி வீட்டுல என்ன பொய் சொல்லலாம்?”. அந்த பணப்பையின் சொந்தக்காரரின் முகவரி ஜீயபுரம், திருச்சியில் இருந்து குளித்தலை செல்லும் வழியில் உள்ள ஒரு ஊர். “அப்போ முக்கம்பூக்கு ( அதே வழியில் உள்ள சிறிய சுற்றுலா தளம்) நண்பனோட போரேன்னு கொளுத்தி போடுவோம்!” என்று நான் முனுமுனுத்து கொண்டேன். “ சரி டா! நாளைக்கு காலையில பத்து மணிக்கு கிளம்புவோம், சத்திரம் வந்துடு” என்று உரையாடலை முடித்து இருவரும் அவரவர் வீட்டிற்க்கு திரும்பினோம். மறுநாள் நண்பன் வசந்த்துடன் பேருந்து பயணம் தொடங்கியது. அன்று “பொன்னியின் செல்வன்” படித்திருக்கவில்லையே என்ற ஏக்கம் இன்று உள்ளது. கல்கியின் காவிரி கரை பற்றிய தனித்துவமான வரிகள் அந்த பயணத்தை மேலும் சிறப்புற்றிருக்க செய்யும் அல்லவா?. ஜீயபுரம் வந்தடைந்தோம். சிறிய ஊராக தென்பட்டது. கண்களுக்கு எட்டிய வரை ஒரு மிதிவண்டி கடை தெரிந்தது. அங்கே சென்று ” அண்ணா ! இந்த அட்ரஸுக்கு எப்படி போனும்” என்றதும் அவர் வழி சொல்ல ,பிறகு புரிந்தது சற்று தொலைவு என்று. அவரிடமே வாடகைக்கு மிதிவண்டி கேட்டோம். ” புது ஆளுக்கு எப்படிப்பா வண்டி குடுக்கறது?.. அண்ணா இது என்னோட பள்ளி அடையாள அட்டை..இத வெச்சுகிட்டு கொடுங்க “என்று என் நண்பன் சொன்னான்.

மிதிவண்டி மெல்ல நகர்ந்தது. பச்சை நிற வயல்வெளியும், ஆங்காங்கே சறிய ஓட்டு வீடுகளும், குடிசைகளும் காட்சியளித்தன. ஏதோ ஒரு புதுவித மகிழ்ச்சி மனதில் துள்ளி குதித்தது. முகவரியை சிலரிடம் கேட்டு அவர் வீட்டை நெருங்கினோம். வாசலில் ஒரு இளைஞர் ” யார் வேணும்” என்றதும் நாங்கள் விவரிக்க அந்த இளைஞர் முகத்தில் இணையில்லா மலர்ச்சி..அவர் நாங்கள் தேடி வந்த நபரின் அண்ணன். அவரிடம் அந்த பணப்பையை கொடுத்து சரி பார்க்க கேட்டுக்கொண்டோம்.எங்களை வீட்டிற்குள் அழைத்து சென்றார். அங்கிருந்த கயிற்று கட்டிலில் அமர்ந்தோம். சற்றே நிமிர்ந்து பார்த்தால் சூரிய ஒளி பல துளைகளில் எட்டி பார்த்தது..நிரந்தரமாய் காணாமல் போன ஓடுகள்!. “கலர் குடிங்க கன்னு” என்று அந்த நபரின் அம்மா தன் கையில் இரு குளிர்பானங்களுடன் நின்றார்.. “என் பையன் இப்போ வீட்டுல இல்லாம போயிட்டான்.. ராவெல்லாம் பொலம்பிகிட்டு கிடந்தான்..இப்ப கூட திருச்சிக்கு அவன் பர்ஸ தேடிதான் போயிருக்கான்! அவர் பெருமூச்சில் நிறைவையும்,கண்களில் ஆனந்தத்தையும் என்னால் உணர முடிந்தது. குளிர்பானம் அருந்தி புன்னகையுடன் விடை பெற்றோம்.

அந்த பணப்பையில் இருந்தது நூற்று அறுபத்து ரூபாய், அதை தொலைத்த இளைஞனின் ஒரு வார சம்பளம். அன்று அந்த பணத்தின் மதிப்பை நான் அறிந்திருக்கவில்லை. செய்த உதவியின் மதிப்பை நன்கு அறிந்தோம். “ இந்த சின்ன உதவிய செஞ்சா இப்படி ஒரு சந்தோசம் அவங்களுக்கும் நமக்கும் ஏற்படுமா? இதில் என்னவோ ஒரு ஆழ்ந்த பொருள் உள்ளது?”..என்று எண்ணிய படி நண்பனுடன் வீட்டிற்க்கு திரும்பினேன்.

நான் இங்கு செய்த பதிவு, நாம் இதுவரை கேள்விப்படாத விசயமாக இருக்க இயலாது. பள்ளிப்பருவம்; வாழ்க்கையின் அறிதல், சமூகத்தின் மீது அக்கறை, இவை ஏதும் அறியாமல், பள்ளி, பாட்டி வீடு, நண்பர்கள் என்று கனமற்ற சிறகாய் பறந்த காலத்தில் இந்த நிகழ்வு என் மனதில் ஏற்படுத்திய உருக்கம் குறிப்பிடத்தக்கது !

“ அறம்” என்ற சொல்லின் புரிதலுக்கான முதல் மைல்கல் ! 🙂

வசந்த் சுகுமார்

செப்பனிட உதவியவர்கள்: பரணீதரன், ஆர்த்தி வசந்த்.