
கல்விக்கு நடுநிலை தரம்
கற்போர்க்கு முதன்மை வரம்
தரம் களவு போனதோ விதி தரைதட்டி விழுந்ததோ நீதி
புதைந்து போனதா நியதியும்
வதைந்து போனதா மனிதமும்- இன்று
பணம் பதுமமும் செய்யும் - என்றென்னை
புதுமொழி எழுதச் சொல்லும்
சான்றோன் போதித்த அறம் - இன்று
கண்மூடிக் கிடப்பதா தர்மம்?
நீதிக்குப் போராடிய கற்போன் - இன்று
வீதியில் செந்நீராடி கிடப்பதேன்?
தடியடியே இன்று நவீன வழக்கோ? - வீண்
தருக்கம் செய்வதே அரசியல் பிழைப்போ?
அடக்குமுறையே இனி ஆளுமையோ?
அறிவின்மையே இனி எதார்த்தமோ?
மாணவன் இழந்த துளி உதிரமே
மண்ணில் எழுமே நீதியுத்தமே!
புலிப்பறழ்கள் புரட்சி செய்தால்
புவியை விட்டோடும் தீயநரிகள்!
கோவலனுக்காக கண்ணகி
பாண்டவருக்காக கண்ணன்- இந்த
கண்மணிகளுக்காக யாரோ?
நம் குரல் ஓங்கி ஒலிக்கவேண்டாமா?
நல்லினம் அறம்காத்து வாழ வேண்டாமா?
இது கவிஞனின் கவிமழையன்று
ஒரு சாமானியனின் கொதிநிலை இன்று! - நம்
இன்னலும் அணலூட்டி வளர
இச்சொற்களால் பொறிவதைத் தவிர
இல்லையே வழிகள் மனம் ஆற!
இந்த கண்மணிகளுக்காக நாம்!
வசந்த் சுகுமார்
