ஒப்பாரி

தவமிருந்து பெத்த மகன் 
தகதகக்கும் தங்கம் அவன்
அன்பா பண்பா இருந்தவன் 
ஊரும் உறவும் மெச்சுனவன் 
களம் பூரா சுத்துனதென்ன - அவன்
காலு ஓடுன ஓட்டமென்ன 
எவன் கண்ணு பட்டுச்சோ 
எம்மகன் புத்தி கெட்டுச்சோ
சினிமா பைத்தியம் புடிச்சுச்சு
சனியன் வேலைய காட்டுச்சு
கண்ணாடி பாத்தே பொழுதுபோச்சு
சோக்கா திரிஞ்சே வயசும்போச்சு
அப்பன ஆத்தாவ ஒதுக்குனான்- கூத்தாடி 
மூஞ்சிய நெஞ்சுல செதுக்குனான்
கலர் படத்துல பாத்தவன 
கடவுள் தான்னு நம்புனான்
பூச என்ன பாட்டு என்ன 
கோசம் என்ன கூட்டம் என்ன

ரசிகன் என்ன தொண்டன் என்ன
கட்சி என்ன மன்றம் என்ன
தலைவா தலைவான்னு கத்துனான்- உசுர 
தரவா தரவான்னு கதறுனான்
அத்து மீறி ஆடுனான்
பித்து ஏறி வாடுனான் 
தூரத்துல இருக்கும் மோகந்தான்னு 
கடந்து விட்டுட்டு போகுந்தான்னு 
நம்பி ஒவ்வொரு கணமும்- என்
பொழுது விடிஞ்சுது தெனமும் 
கூட்டத்துக்கு போனான் முந்தி
இருட்டிட ஓங்குச்சு பீதி- நடு
சாமத்துல சொன்னாங்க சேதி- எம்மகன் 
பிணத்துக்கு இல்லைங்க நாதி! 
எவனுக்கோ மூச்சப் பிடிச்சு கத்துனவன்
எமனுக்கு மூச்ச வித்து கெடக்குறான் 
சொன்னத செஞ்சுட்டு போயிட்டான் 
பெத்தவ நெஞ்சுல தீய மூட்டிட்டான்! 
தவமிருந்து பெத்த மகன்-இப்ப
தணலுருக்கும் தங்கம் அவன்!  

வசந்த் சுகுமார்

பிணங்கள் மீது புழுக்கள் கொண்டது அதீத காதல். அதற்காக அது அங்கீகரிக்கப் பட வேண்டுமா? இந்த நவீன சமூகத்தின் பெரும்பான்மை, பிணங்களையும் புழுக்களையும் அங்கீகரித்து, போற்ற முற்படுகிறது. கொதிநிலையில் நம் மனம். இன்னும் எத்தனை உயிர்களை விழுங்கி தெளிவு பிறக்குமோ?

Published by vasanth sukumar

Anaesthesiologist, nature lover, book lover, budding writer

One thought on “ஒப்பாரி

Leave a comment