வெட்டியான் பேச்சு

இடுகாடும் எனக்கு வீடுதேன்
சவங்க என்னோட ஒறவுதேன்- நான்
எம்புட்டு பொலம்பல கேட்டவன்-இந்த
வெட்டியான் பொலம்பறேன் கேளுங்களேன்!

“காசு மேல கொள்ள
ஆச எவனுக்கு இல்ல
கலரு நோட்டு ஜோப்புல
பொழுது ஓடும் ஜோருல -ரூவா
கிழிஞ்சா ஒட்டு போடுவான்
கசங்குனா கண்ணு கலங்குவான்
தொலஞ்சா ஒடஞ்சு போவான்- நீ தொலச்சா
ஒன்ன ஒடச்சு போடுவான்

வூடு வாங்க கடனு
கடன தீக்க பவுனு- இப்ப
மவளுக்கு எங்க பொன்னு?
மவனுக்கு எங்க மண்ணு?-மனுசபயலுக
துட்டு இல்லாம மேயிறாக;
வங்கில நின்னா வையிறாக;
ஒறவ கேட்டா பசப்புறாக;-கூட
சுத்துன பயலுக ஏசுறாக

தட்டுல வைக்க காசு- நடு
நெத்தில வைக்க காசு-பொய்ய
கத்தி சொல்ல காசு- சத்தியத்த
பொத்தி வைக்க காசு

பைசா வேணுமுன்னு சொல்லிகிட்டு
ஓடி ஒழச்சான் நொந்துகிட்டு
சோலிக்கு ஏத்த கூலியில்ல
கூலிக்கு மேல நோவுதொல்ல
நோவு போக்க செலவிருக்கு
துட்டு கொஞ்சம் மிஞ்சிருக்கு
பசி என்னவோ எஞ்சிருக்கு
ரூவாக்கு எங்க பதிலிருக்கு

இல்லாத பய ஏங்குறான்- காசு
உள்ளவனோ மேல கேக்குறான்
சவக்குழி நெருங்கையில ஒணருறான்
வெறுங்கையா போவோமுன்னு நடுங்குறான் -பயல
எரிச்ச பொறவும் அடங்குல- சில்லரைக்கும்
சவத்துக்கும் ஒறவும் முடியல
கைய தூக்கி தொளாவுறான்
தடியில ஒன்னுபோட்டா அடங்குறான்

வெட்டியான் பொலம்பறேன் கேளு!

சவத்த பொதச்சும் எரிச்சுந்தேன் - என்
வவுறும் தெனமும் நெறயுந்தேன்-இது
வெட்டியான் பொழப்பு ஆச்சுதேன்- இங்க
எதுக்கும் வேணும் காசுதேன்!

வசந்த் சுகுமார்

Published by vasanth sukumar

Anaesthesiologist, nature lover, book lover, budding writer

One thought on “வெட்டியான் பேச்சு

Leave a comment