பத்து வருடங்கள் ஆயிற்று என் கமலா பாட்டி எங்கள் அனைவரையும் பிரிந்து சென்று. பண்டிகைகள், திருவிழாக்கள், முழு ஆண்டு விடுமுறை நாட்கள் என்றால் நினைவுக்கு வருவது திருச்சியில் உள்ள என் கமலா பாட்டியும் அவர் வீடும் தான். பாட்டியின் பலகாரங்களும், மிகையான அன்பும், செல்லமான கடிதலும் அவரது எல்லா பெயரக் குழந்தைகள் மனதில் இன்றும் என்றும் செழிப்பான நினைவுகளை தரக்கூடியவை.
நான் விவரங்கள் அறிந்த நாள் முதல் இன்று வரை கண்ட இரும்பு மனிதர் அவர். எனக்கு தெரிந்த நல்லொழுக்கக் கதைகள் சொன்ன ஔவையும், தொண்டாற்றிய காரைக்கால் அம்மையும், ஓய்வின்றி உற்சாகமாக ஓடிய ஒலிம்பிக் தடகள வீராங்கனையும், நான் வாய்பிளந்து பார்த்த ஒண்டர் உமன் போராளியும் அவர் தான். அவள் கதை வரலாற்றில் சொல்லப்படாமலே போயிற்று!
கோடை விடுமுறையில் பாட்டி வீட்டு தோட்டத்தில் நாங்கள், பேரத்தலைமுறைகள் போட்ட ஆட்டம் அளவற்றது. அவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தவறாமல் எங்களை அழைத்து சின்ன அண்டாவில் “ரஸ்னா” கலந்து கொடுப்பதும், நாங்கள் வேகமாக அருந்தி விட்டு “இன்னொரு டம்ளர் வேணும் பாட்டி!”என்று போட்டியிட்டு கேட்டால் மீண்டும் புன்முறுவலுடன் டம்ளரை நிறைப்பதும் எங்கள் கமலா பாட்டி தான். அட்சய பாத்திரம் அந்த அண்டா மட்டுமல்ல என் கமலா பாட்டியின் மனமும் கூட! சாம்பார் சாதத்தை சூடாக நெய் மணக்க பிசைந்து பாட்டி கையால் ஊட்டி விட்டால் இறங்காத வயிற்றிலும் சோறு சரசரவென இறங்கும். பேரக்குழந்தைகள் முகம் வாடாமல் பார்த்து கொண்ட என் பாட்டி.. வயிறார சாப்பிட்டாரா? மனம் நோகாமல் இருக்கிறாரா? என்று கேட்டறியும் அறிவு அப்பருவத்தில் இல்லை என்ற வருத்தம் உண்டு. கமலா பாட்டி பச்சிளம் குழந்தைகளை நீராட்டுகையில் அவரது கைகள் வித்தைகள் காட்டும். பேரக்குழந்தைகள் நாங்கள் அனைவரும் குளித்த நவீன குளியல் தொட்டி என் பாட்டியின் முழங்கால்கள்தான்!
தீபாவளிக்காக கமலி (தாத்தா பாட்டியை இப்படித்தான் செல்லமாக கூப்பிடுவாராம்!) செய்யும் அறுசுவையான பலகாரங்கள் எல்லாமே மாஸ்டர் பீஸ்! தீபாவளி அதிகாலை ஆரம்பித்து அவர் செய்யும் பெருமாள் வடை, சுழியத்தின் இன்சுவை இன்றும் தீபாவளி நாட்களன்று நாவின் சுவை அரும்புகளை பட்டென்று தட்டி நினைவூட்டும். தகவலின்றி வீட்டிற்கு வரும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் முகிழ் நகையுடன் விருந்தோம்பினார் என் பாட்டி. செடி, கொடி, மரங்கள், நாய்க்குட்டி, கோழிகள், மாடுகள் இவை அத்துணை மீதும் கமலா பாட்டிக்கு அளவில்லா காதல். தன் பிள்ளைகள் போல் அன்பாக பார்த்து கொண்டு வளர்த்தவர். நாயன்மார்கள் சிவனுக்காக உருகி சரணடைந்தார்கள், என் கமலா பாட்டி தம்மக்களுக்காக சேவைகள் செய்து தன்னையே உருக்கி சமர்ப்பணம் செய்தவள். அவரை அடியார்களுக்கும் ஒரு படி மேல் வைத்து பார்க்கிறேன் நான்.
பேதை முதல் பேரிளம்பெண் வரை துணைவியாய், தாயாய், பாட்டியாய் அத்துணை குடும்ப பதவிகளையும் சிறப்புறச் செய்து தெய்வமானவள் என் கமலா பாட்டி. பேரத்தலைமுறை எங்களின் “செல்ல டெடி” அவள். ஆனால் அவர் நலத்தை என்றுமே அவர் கவனித்து கொண்டதில்லை. சிறிய, பெரிய இடையூறுகள் எதுவானாலும் பாட்டிக்கு அவர் சொந்த நெறிமுறையில் உள்ள விந்தையான வைத்தியம் தான் உதவும். பித்தம் தீர்க்க பொவன்டோ, ஆற்றல் ஊக்குவிக்க பன்னீர் சோடா, டைம் பாஸுக்கு கோலி சோடா, தலைவலிக்கு கோடாளித் தைலம், நெஞ்சு வலிக்கு ஈனோ, கால் அரிப்புக்கு மெல்லிய சூட்டுடன் உள்ள காபி டம்ளரின் அடிப் பகுதியால் வருடுதல் என்று கமலா பாட்டியின் விசித்திரமான வைத்தியப் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.
கமலா பாட்டி கற்ற அறிவு குறைவெனினும், அவர் வாழ்வையும், தாத்தா; ஐந்து பிள்ளைகள்; பத்து பேரக்குழந்தைகள் என்று தன் பெரிய குடும்ப கப்பலை ஒரு கேப்டன் போல செம்மையாக வழி நடத்திச்சென்ற மிகச்சிறந்த ஆளுமை கொண்ட நுண்ணறிவாளி அவள். தனி ஆளாக பயணம் செய்வதற்கும், பாதைகளை நினைவில் வைத்து கொள்வதற்கும் துள்ளியமான ஜி.பி.எஸ் அவளிடம் இருந்தது! எண்கள் அறியாத கமலா பாட்டி, தொலைபேசியில் தனக்கென்று ஒரு குறியீடு முறையை வைத்து எவர் உதவியுமின்றி டயல் செய்யும் அறிவுநுட்பம் இன்றைய ஐ.ஓ.எஸ்(iOS) க்கு நிகரானது! தினசரி சமையலானாலும் சிறப்பு பலகாரங்களானாலும் பாட்டியின் விஞ்ஞான கருவிகள் அனைத்தும் அவள் கைப்பிடி தந்திரங்களும், ஆக்கத்திறன் கணக்கீடுகள் மட்டுமே! கமலா பாட்டி எங்கள் மரபணுவில் ஆழமாக பதித்து சென்ற வாழ்வியல் விழுமியங்களே இன்றும் நாங்கள் வாழ்வில் நெருக்கடியான தருணங்களில் வீழாமல் நிலைப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று நான் கருதுகிறேன்.
தியாகம் என்றறியாமலேயே தன் வாழ்கையை தன் அன்புக்குரியவர்களுக்காக தியாகம் செய்து ஒரு அழகான, முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து முடித்த அற்புதமான குடும்ப தலைவி என் கமலா பாட்டி! கமலா பாட்டி அவருக்கென்று என்ன செய்து கொண்டாள்? கமலா பாட்டியை இழந்த பின் நாங்கள் இழந்தது போர்க்களமான வாழ்வை வெல்லும் அறிவை சேமித்த கலைக்களஞ்சியத்தை, இலைகள் உதிர்ந்தாலும் வேர்களை இறுக்கி ஆண்டாண்டுகளாய் நிழல் தந்து எங்களை காத்த வலுவான மரத்தை, நெகிழ்திறன்; சகிப்புத்தன்மை; நடுவுநிலைமை என பல நற்பண்புகளை இயல்பென கொண்ட பொக்கிஷ நூலகத்தை…! என் கமலா பாட்டிக்கு நிகர் யார்? இவள் போல் எத்துணையோ குடும்பங்களில் வாழ்ந்த மற்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் கமலா பாட்டிகள் தானே! தேவதைகளுக்கு மறுபிறவி இல்லை. சொர்கத்திலும் பிறருக்கு ஆற்றும் அன்புப் பணியை தொடங்கியிருப்பார் கமலா பாட்டி!
ஐ லவ் யூ கமலி!
தன்னுடன் பாட்டியின் நினைவுகளை பகிர்ந்த பேரப்பிள்ளைகளின் பங்களிப்புடன்…
இவன் பெயரன் வசந்த் சுகுமார்
செப்பனிட உதவியவர்கள்: பரணீதரன் ஆர்த்தி வசந்த்

Very nice….. memories sir…..
God’s gift is grandma and grandpa……
LikeLike
வசந்த! பாட்டியின் உறவை விளக்கிய விதம் மிகவும் அருமை. எவ்வாறு பாட்டி, பேரப் பிள்ளைகளை உருவாக்கி இருக்கின்றார் என்பது நன்கு புலனாகின்றது. கமலா அம்மாள் அன்பினாலும், பண்பினாலும் எவ்வாறு அற்புத குணம் கொண்ட மனிதர்களை வார்த்த விதம் தெளிவாக தெரிகின்றது. நாம் உருவாவதற்கு பிற மனிதர்கள் தான் காரணம் என்ற பேருண்மையை, மனிதர்கள் மறந்துகொண்டிருக்கும் வேளையில், சமூகத்தை கட்டுருவாக்கிய முன்னோர்கள் பற்றி நினைவு கூர்வது அவசியமான ஒன்றாகின்றது. 1991க்கு பிறகு, உறவுகள் உதிர்ந்துகொண்டிருக்கும் வேளையில், உதிரம் கொடுத்தப் பந்தங்களை நினைவு கொள்ள, வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பதற்கு வாழ்த்துகள். நல்ல எழுத்து நடை வசந்த். நேரம் இருக்கும்பொழுது, நிறைய எழுத வேண்டும்.
LikeLiked by 1 person