பள்ளிப் பருவத்தின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தற்பொழுது நினைவுகூர்கிறேன். குறிப்பாக எனது தொடக்கப்பள்ளியான “ லிட்டில் ஏஞ்சல்ஸ்” எனக்கு அளித்த பிறந்தநாள் நினைவுகள் என் மனதிற்கு மிக நெருக்கமானவை. அன்று ஐந்தாம்; ஆறாம் வகுப்பு காலங்களில் என் பிறந்தநாள் ஆவலாக துவங்கி இனிய நினைவுகளுடன் முடிவடையும். அது போன்ற ஒரு பிறந்தநாளின் நினைவுகளை உங்களுடன் பகிர்கிறேன்.
காலையில்.. கோரைப்பாயில் வெவ்வேறு திசைகளில் உருண்டு, போர்வையுடன் போர் செய்து, சுமையான இமைகளை திறக்க முயன்று, சோம்பல் முழுதாக நீங்குவதற்கு முன்னரே அம்மா, அப்பா மற்றும் அண்ணனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் காதில் ஒலித்தது. அன்று என் பர்த்டே என்றறிந்ததும் பள்ளி நாள் கூட உற்சாகமான நாளாக மாறிவிட்டது. “அம்மா எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு மா” என்று சொல்லி நான் அங்கும் இங்கும் பரபரப்பாக ஓட.. அம்மா என்னை நோக்கிய விதம்.. “ஏன்டா மத்த நாளுல எந்திரிடா, எந்திரிடா..ன்னு தொண்ட தண்ணி வத்த கத்துனா கூட அங்கப்பிரதட்சணம் பன்னுற மாறி உருண்டுகிட்டே இருப்ப..ஆனா இன்னிக்கு..” என்ற மைண்ட் வாய்ஸ் நன்றாக புரிந்தது. அன்று மட்டும் நான் பள்ளிக்கு கிளம்புவதில் ஆர்வமும் வேகமும் இருந்ததற்கு காரணம் பல மகிழ்வான எதிர்பார்ப்புகளே..
குளித்தவுடன் பள்ளிச்சீருடையை ஏளனமாக பார்த்துவிட்டு, “அம்மா பர்த்டே டிரஸ் எங்க இருக்கு மா, சீக்கிரம்!” என்று கேட்டு அணிந்து கண்ணாடி முன்நின்று பார்த்தால் புனைகதையின் சூப்பர் ஹீரோ போல காட்சியளித்தேன். ஆஹா ..இன்னிக்கு என்ன ஸ்பெஷல் ? .. கட்டாயம் கேசரி இருக்கும், சாயங்காலம் குலாப் ஜாமுனும் கிடைக்குமா?.. என்ற துள்ளலுடன் அம்மாவின் சிறப்பு காலை உணவை ரசித்து ருசித்து பசியாறினேன். “இந்த டிபன் பாக்ஸ்ல கேசரி இருக்கு, பக்கத்துல உமா அக்கா வீட்டுல போய் குடுத்துட்டு வா, பிறந்தநாள் பரிசா பணம் குடுத்தா வாங்க கூடாது..என்ன?”என அம்மா சொன்னவுடன் நன்கு தலையாட்டினாலும், இனிப்பு கொடுத்து, வீட்டிற்கு வந்ததும் என் சட்டைப்பையில் பணம் இருப்பதை அம்மா அறிந்தார்.. “அம்மா… நான் வேண்டாம்..வேண்டாம்னு கதறியும் எப்படியோ என் பாக்கெட்ல பணத்த வச்சிட்டாங்க மா!” பக்கத்து வீட்டுல வேண்டாம்னு மெதுவா சொல்லி நடிச்சேன்னு யாருக்கு தெரியப்போது… ஸ்கூல்ல தீனி வாங்க பணம் வேணும்ல..என்றெண்ணி சிரித்தேன். பள்ளிப்பையில் சாக்லேட் பாக்ஸை எடுத்து வைத்துக்கொண்டு கிளம்பினேன். ஆட்டோ நண்பர்களுக்கு சாக்லேட் கொடுத்து பள்ளியில் நுழைந்தால் புத்தாடையைப் பார்த்து “ ஹப்பி பர்த்டே, காட் பிளஸ் யூ, பர்த்டே டிரஸ் சூப்பரா இருக்கு” என வகுப்பிற்கு செல்லும் முன்னரே பலரிடமிருந்து வாழ்த்துக்கள் வந்து குவிந்து மகிழ்ச்சி பொங்கச் செய்தது.
வகுப்பில் பிறந்தநாள் வாழ்த்து பாட்டு முடிந்தபின் வகுப்பினர்க்கும் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு வகுப்பாக சென்று சாக்லேட் கொடுப்பது எனது பள்ளியில் வழக்கமான ஒன்று. இந்த குறுஞ்சுற்றுலாவிற்கு துணையாக ஒரு தோழன் வருவதும் வழக்கம். சாக்லேட் தீர தீர பாக்ஸில் மீண்டும் நிரப்புவது, அவ்வப்பொழுது அவன் கொஞ்சம் சாப்பிடுவது, சிறிது அள்ளி அரைக்காற்சட்டைப்பையில் போட்டுக் கொள்வது.. இவைதான் இந்த பிறந்தநாள் தோழனின் தவறாத கடமைகள். “டேய்! மெதுவா போலாம் டா..இன்னும் ஒரு பிரியட் முடிஞ்சா லஞ்ச் பிரேக்..நான் வேற ட்ராயிங்க் ஹோம்வொர்க் பண்ணல! அந்த மிஸ்சு முட்டி போட வச்சு செம்ம அடி அடிப்பாங்கடா” என்று என் நண்பன் என்னிடம் சொல்ல மதிய உணவு இடைவேளை வரை சுற்றுலாவை மெல்ல நீட்டித்தோம்.
மணமகன் தோழன் போல இந்த “ பிறந்தநாள் தோழன்” கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த வழக்கம். பிறந்தநாள் தோழன் பதவிக்கு வகுப்பில் பல கலவரங்கள் நடந்தது உண்டு. நானும் என் நண்பர்களுக்கு பிறந்தநாள் தோழனாய் துணையாக சென்றிருக்கிறேன். அன்று வகுப்பில்.. மதியம் நான் செய்த குறும்பினால், ஆங்கில ஆசிரியை என்னை தண்டிக்க நேர்ந்தது..சட்டென்று வகுப்பில் பல குரல்கள் “மிஸ்! அவனுக்கு இன்னிக்கு பர்த் டே மிஸ்..” என்று கூச்சலிட்டு என்னை விடுதலை செய்தார்கள். அடடா! என்ன அருமையான நண்பர்கள். பள்ளியில் இருந்து வீடு திரும்பும் பொழுது.. இது போன்ற நாள் மீண்டும் வர ஒரு வருடம் ஆகுமே என்று முகம் வாடினாலும், இரவு வரை பிறந்தநாள் தொடரும் என்ற உற்சாகம் வழி நடத்திச்சென்றது. வீட்டிற்கு வந்ததும் அம்மாவுடன் கோவிலுக்கு சென்று, பள்ளி நிகழ்வுகளை பகிர்ந்து, இனிப்புகள் சாப்பிட, அந்த நாள் தித்திப்புடன் நிறைவு பெற்றது.
ஆனால் இன்றைய காலம் – சமீபத்தில் நண்பரது மகனின் எட்டாவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றிருந்தேன். அந்த பார்ட்டி ஹால் திருவிழா போல காட்சியளித்தது…வேடிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், பல வகை உணவுகள், குளிர்பானங்கள், அந்த சிறுவனை அச்சுறுத்தும் உயரமான கேக் இவற்றுடன். “ரிடர்ன் கிஃப்ட்” என்ற ஒரு வழக்கத்தை அன்று நான் அறிந்தேன். பிறந்தநாளிற்கு வரும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு பரிசு கொடுக்கும் வழக்கம். “இதெல்லாம் கௌரவப் பிரச்சனைங்க”..என்றார் என் நண்பர். மேலும் எனக்கு ஆச்சிரியமூட்டிய ஒன்று.. “ பர்த்டே தீம்”. அந்த அறை முழுவதும் ஸ்பைடர் மேன் படங்கள்; அலங்காரங்கள்; பின்னணி, ஸ்பைடர் மேன் கேக் மற்றும் குட்டி ஸ்பைடர் மேன் முகமூடிகளாக மாறிய குழந்தைகள்! அந்த பிறந்தநாள் சிறுவனும் ஸ்பைடர்மேன் போல ஆடை அணிந்திருந்தான். இந்த பையனோட அம்மா அப்பா மட்டும் ஏன் ஸ்பைடர் மேன் டிரஸ் போடல?.. என்றெண்ணி புன்னகையுடன் அவனுக்கு வாழ்த்து தெரிவித்து விடைபெற்றேன். அந்நாட்களில் எளிய முறையில் பிறந்தநாள் கொண்டாடிய குழந்தைகள்தான் இன்று பெற்றோர்களாக இருக்கிறார்கள். அன்று…அன்பு பரிமாற்றங்களும், பலகாரங்களும், பெரியோர்களின் ஆசியும், , வகுப்பில் கிடைத்த கவனமும், சின்னச்சின்ன சலுகைகளும் நிறைவான மகிழ்ச்சியை கொடுத்தன. இன்று…பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுவதும், வெகு நாட்கள் முன்னரே திட்டமிடுவதும், கௌவரவக்குறை அல்லாது இருக்க யோசிப்பதும் என அனைத்து முயற்சிகள் செய்த பின்னரும் “இன்னும் கிரேண்டா பண்ணிருக்கலாமோ? என்று மனநிறைவற்ற நிலையில் வருந்துகிறார்கள் இன்றைய பெற்றோர்கள். மேற்சொன்ன இந்த விந்தையான வழக்கங்கள் எவ்வாறு நம்மிடம் ஊடுருவியது; அரும்பும் சந்ததியினர்க்கு என்ன கற்றுக்கொடுக்கப் போகின்றது? நம் முன்னோர்கள் நமக்கு பரிசாக அளித்த பண்பாட்டின் கருப்பொருள் மெல்ல அழிந்து போகின்றதே! என்று மனதை கனமாக்குகிறது இந்த புதிய “பிறந்தநாள் கலாச்சாரம்”
வசந்த் சுகுமார்
செப்பனிட உதவியவர்கள் – பரணீதரன், ஆர்த்தி வசந்த்.

அருமையான பதிவு. தேர்ந்த சமூக மாற்றத்திற்கான தூண்டல்
LikeLike
I too hate the recent trending birthday parties
LikeLike
அருமையான பதிவு
LikeLike