நண்பனோடு நாளைக் கடத்து
பகைவனிடம் தோற்று மகிழ்
அம்மாவின் மடியில் அசரு
கடமையைச் சிறிது தவறு
கடவுளிடம் கெஞ்சி நில்
காலனிடம் கபடம் செய்
பிஞ்சிடம் பாசாங்கு பண்ணு
மழலையை மிகைப் படுத்து
பொய் சொல்லி பிதற்று
வாதாடி வற்றிப் போ
மண்ணிடம் மனதாற மன்றாடு
தண்ணீர் எடுத்து முத்தமிடு
மல்லிகைப் பிடித்து மோப்பமிடு
உலகிடம் உன்னை இழந்திடு
தும்பியைத் துரத்திப் பிடி
எறும்பிடம் சாகசம் காட்டு
பட்டமாய் உயரப் பற
பம்பரமாய் சுற்றி விழு
கிணற்றில் கனவு காண்
புல்வெளி போர்த்திப் படு
வெட்டியாய் வெயிலில் திரி
விடியலை மெல்ல ரசி
நிலவிடம் மௌனம் துற
மழையிடம் ரகசியம் சொல்
மேகத்தை எட்டித் தொடு
செடிகொடி ஆரத் தழுவு
குருவியோடு கொஞ்சிப் பாடு
மலர்களை முற்றுகை இடு
கண்ணாடி முன்நின்று பேசு
காகமிடம் பகட்டு செய்
பனியிடம் மனம் உருகு
வான்நோக்கி உரக்கக் கத்து
விண்மீனின் வெட்கம் பார்
வண்ணப்பூச்சி பின் தொடரு
கற்பனைத் தீரக் கிறுக்கு
கவிதையில் மூழ்கி எழு
கனம்தீர கதறி அழு- தாய்
மொழியில் தொலைந்து போ
தனிமையில் புதைந்து மீள்
நித்தமும் புதிதாய் பிற
நேசித்துக் காயப் படு
பித்தனைப் போலச் சிரி
ஆரவாரம் செய்து ஆடு
காதலித்து காற்றில் மித!
வாழும் போதே வாழ்ந்திடு!
மனதார மடிந்து போ!
வசந்த் சுகுமார்
