பிஞ்சிலே நஞ்சு உள்ளம்- இவன்
நெஞ்சிலே வஞ்ச வெள்ளம்- இவன்
ஆறாம் அறிவு அழிந்தொழிய
களையோடுக் கருணையும் அறுத்தெறிந்து
விளையாட்டாய் வன்முறை பழகி
கொலையறுக்கப் பயிற்சி பெற்று
குண்டு வெடித்து மகிழ்ந்து
துப்பாக்கிப் பிடித்துத் துணிந்து
இறை,இனம் பெயர் சொல்லி
மதம்,மண் பெயர் சொல்லி
படையொன்று இங்கு உருவாக்கினான்
அடையாளம் இன்றி வலுவாக்கினான்
கொள்கைத் தரும் போதை- இவனைச்
செய்யத் தூண்டும் வதை
புனிதம் எது? போர் எது?
புனிதப்போர் இவனுக்கு நியதியானது!
இவன் ஆழ்மனது கூச்சலிடும்
"அன்பு என்ன தந்துவிடும்?
அரவணைப்பும் ஆக்கமும் மட்டும்
தீயது எத்தனை அள்ளித்தரும்
திகட்டாத இன்பம் ஈட்டும்
பழிதீர்த்து தாகம் தணிக்கும்
குருதிபார்த்து இதயம் கனியும்
இறைபணி நிறைவு பெறும்
பிறவிப்பயன் பரிசாகக் கிடைக்கும்"
அப்பாவிகள் கொன்று ஆட்சி செய்து
பேடிகள் என்று பெருமிதம் கொண்டு
இவன் அறிவு அனைத்தும் அழிப்பதற்கு மட்டும்
இவன் ஒற்றுமை என்றும் தீவிரவாதத்தில் எட்டும்!
தீவிரவாதிக்கு ஒரு கடிதம்
கருவிலே நற்கதை கேட்டு
ஒழுக்கம் கற்று வளர்ந்து
உலக அறிவு பெற்று
அறிவோடு வீரமும் வளர்த்து
கடமைதவறா கல்வி கற்று
தாய்மண் காக்கப் பயின்று
போர்த் தொழில் பழகி
எந்திரமும் ஏவுகணையும் ஏந்தி
எம்மக்கள் எந்நாடு என
நாட்டுக்குப் பலவீர்கள் என்று
"உலகில் யாவரையும் காப்போம்" என்றோம்
முப்படைகள் நாங்களென முழங்கிச் சொன்னோம்!
வீரம் எனக்குத்தரும் இதம்
உனை வெல்லச்செய்யும் நிதம்
மதம் எது? இனம் எது?
மனிதம் மட்டுமே நியதியானது!
அன்பு அத்தனையும் தரும்
மண்,மொழி மக்கள் காக்கும்!
உறவினர் அன்பெனக்கு காவல்தெய்வம்
தாய்மண்ணின் மடியெனக்கு ஆலயம்
புவியிருக்கும் வரை புரட்சிசெய்வேன்!
குருதி இழந்தாலும் கொடிகாப்பேன்!
நான் மடிந்து மாய்ந்து போனால்- என்மகன்
மார்தட்டி நிற்பான் போர்க் களத்தில்!
சாமானியன் இடம் சாகசம் ஏனோ?
அவன் உணர்ச்சிகளின் உருவம் நானோ!
பேடிகளை கொன்று குவித்திடுவேன்- இதை
பெருமிதமாய் உரக்கச் சொல்லிடுவேன்!
தீமை வெல்லும் எனில் நான் எதற்கு இங்கே?
என் ஒவ்வொரு அணுவும் போரிடும் "மனிதம்" காக்கவே!
இவண் மாவீரன்
வசந்த் சுகுமார்
