(இயற்கை-பகுதி 1)

இயற்கையின் இயக்கம் யாதென அறிய என் வாழ்நாள் போதாதென,
அகத்தில் ஆரவாரமூட்டி ஆகர்ஷிக்க வைத்த இயற்கையிடம்,
மொழிந்து
இசைத்து
முத்தமிட்டு
வாஞ்சை கொண்டு,
புகலிடமாய் என்னை புகுத்த மிகைப்படுத்தி மன்றாடுகிறேன்!

“திகட்டாத உறவுகள்”

“இலைமடி அமர்ந்து         
எடைதனை இழந்து இன்புற பறக்கிறேன்

காற்றோடு ஈரஞ் சுமந்து ஊற்றோடு நேசங் கொண்டு
பெரும்பாறை ஊடுருவி
செம்மண் ஆறத்தழுவி
இலக்கின்றி போகிறேன்

காகம் விரல்பிடித்து பறந்து- தேடித்தீரா
தாகம் உணர்கிறேன்
பறவைக் கூட்டின் நெருடலில் படர நினைக்கிறேன்
குறுங்கதிர் நுனிநீர் 
குலுங்கிச் சிதற
குளிர்மழையில் நனைகிறேன்
சுடுவெயில் கண் சிமிட்டி சுகமாய் உருகும் பனியின் காதல் அறிகிறேன்
சிலந்தி வலை அத்தைமடி                                        சில்லென தென்றலின் தாலாட்டு                                        சில மணி மெல்லுறங்கினேன்

அரும்பு மலருகையில் இரு தேனீக்கள் பேசுகையில் கருவண்டு தேனுறிகையில் பெரும் மௌனம் கலையும் சப்தம் கேட்கிறேன்
களைத்து விழித்து           
குவளைமலர் மணம் ஈர்த்து
களிப்பேறி கவலை மறந்து நடக்கிறேன்

அறுகோண வீட்டில் வாடகையேறி அரசி தேனீ வணங்கி அமிழ் தேன் பருகி மறைபொருளேந்திய நடனத்தில்
மதிமயங்கி மீள்கிறேன்
துடித்து வரும் அலையின் முன்                                       பிடித்து வைத்த மணல்வீட்டில்- தேகம்                                மடித்து இளைப்பாற நினைக்கிறேன்
இரு கையிறுகப் பற்றிய மண்ணின் ஈரம்
இரு உறவுகளுக்கு இதமோ! இந்த நிலமகளுக்கும் அவள் மகன் எனக்கும் தொப்புள் கொடி வரமோ!

மிகை…….தொடரும்

வசந்த் சுகுமார்

Published by vasanth sukumar

Anaesthesiologist, nature lover, book lover, budding writer

Leave a comment