“கருவறை ஒளி பெற்றது
கள்ளிப்பால் கலங்கியது
நிலம் நலமானது
ஞாயிறு குளிர்ந்தது
அம்புலி ஆனந்தம் கொண்டது
விண்மீன்கள் வெறியாட்டம் போட்டன
மழலை அவளிடம் குழைந்தது
அவள் மதிப்பெண் குவிந்தது
கல்வித்தாய் களிப்படைந்தாள்
அவள் மதி நிறைந்தது
மதிப்பு நீடித்தது
மொட்டுக்கள் அவளுடன் சேர்ந்து மலர்ந்தன
நாற்பண்புகளும் நாணி கோலம் போட்டன
காதல் அவளை காதலித்தது
அழகென்ற வார்த்தை அன்று அங்கீகாரம் பெற்றது
உலகப் பூக்கள் அத்தனையும் தோல்வியுற்றன
மாலையும் தாலியும் அவளைச் சூட போரிட்டது
சுதந்திரம் அவளை கலகம் செய்து பிரிந்தது
கடைசி போராளி போல் ஆணவத் தலைகளை மிதித்து குடும்பக் களத்தில் நின்றாள்
பிள்ளை பெற்ற முகம் காட்டி பிரசவ வலியை பயந்தோடச் செய்தாள்
அன்பிற்கு தாயானாள்
பிள்ளைகளுக்கு தந்தையுமானாள்
ஓய்வை ஓய்வெடுக்கச் சொல்லி ஓட விரட்டினாள்
அசாதாரணமாக அரசாட்சி செய்தாள்
எந்திரங்களுக்கு மந்திரம் கற்றுத் தந்தாள்
விண் வெளிக்கும் வந்து வாசம் தந்தாள்”
செயற்கை நுண்ணறிவிடம் அவள் யாரென்று கேட்டேன்
“அவளா? ..ஆஹா ! என்று வியந்து வாயைப் பிளந்தது!
நம்முள் நம்மவள்!
அவள் ! பெண் !! ” என்றது.
Dedicated to my அம்மா, கமலா பாட்டி and all the wonderful women in the world.
வசந்த் சுகுமார்
